IPL 2026: ஆர்சிபி வேண்டுமென்றே தோல்வி அடைந்ததா? பிளே-ஆஃப் செல்லும் முன் எடுத்த ரிஸ்க்
ஹைதராபாத்: 2026 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த போதிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை உறுதி செய்துள்ளது. ஆனால், இந்தப் போட்டியில் பெங்களூரு அணி கையாண்ட அணுகுமுறை சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தகுதிச் சுற்றுக்கு முன்னதாக எடுக்கப்பட்ட சாமர்த்தியமான முடிவா அல்லது அந்த அணியின் பலவீனமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
256 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய போது, ஒரு கட்டத்தில் விக்கெட்டுகள் சரிந்ததும் பெங்களூரு பேட்ஸ்மேன்கள் ரன் வேகத்தை அதிரடியாகக் குறைத்தனர். இலக்கை எட்ட முடியாது என்று தெரிந்ததும், தேவையில்லாமல் விக்கெட்டுகளை இழந்து ரன் ரேட்டை குறைத்துக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை. கேப்டன் ரஜத் படிதார் மிகவும் நிதானமாகச் செயல்பட்டு, அணிக்குத் தேவையான ரன் ரேட்டை உறுதி செய்தார். முந்தைய காலங்களில் ஆர்சிபி அணி உணர்ச்சிவசப்பட்டு விக்கெட்டுகளைத் தாரைவார்க்கும், ஆனால் இந்த முறை ரஜத் படிதார் தலைமையில் அந்த அணி காட்டிய முதிர்ச்சி பாராட்டத்தக்கது.

பந்துவீச்சு கவலை அளிக்கிறது
பேட்டிங்கை விட பந்துவீச்சில் பெங்களூரு அணி காட்டிய மெத்தனம் தான் இப்போது மிகப்பெரிய கவலையாக உருவெடுத்துள்ளது. புவனேஸ்வர் குமார் 51 ரன்கள், ஹேசில்வுட் 55 ரன்கள் மற்றும் ரசிக் சலாம் 52 ரன்கள் என வாரி வழங்கினர். தகுதிச் சுற்றுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அனுபவ பந்துவீச்சாளர்கள் 50-க்கும் மேற்பட்ட ரன்களை விட்டுக்கொடுப்பது அந்த அணியின் தன்னம்பிக்கையைச் சிதைக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக டெத் ஓவர்களில் பந்துவீச்சாளர்கள் ரன்களைக் கட்டுப்படுத்தத் திணறியது அப்பட்டமாகத் தெரிந்தது.
தகுதிச் சுற்று சவால்
மே 26-ம் தேதி தர்மசாலாவில் நடைபெற உள்ள முதலாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் பெங்களூரு அணி குஜராத் டைட்டன்ஸை எதிர்கொள்கிறது. ஹைதராபாத் அணியைப் போல குஜராத் அணி ஆரம்பம் முதலே அதிரடியில் இறங்காது. சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் நிதானமாகவே ஆட்டத்தைக் கட்டமைப்பார்கள். எனவே, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கொடுத்த அடியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, பந்துவீச்சில் முன்னேற்றம் கண்டால் மட்டுமே பெங்களூரு அணியால் நேரடியாக இறுதிப் போட்டிக்குச் செல்ல முடியும்.
ஒருவேளை இந்தத் தோல்வியின் தாக்கம் பெங்களூரு வீரர்களின் மனதில் தங்கிவிட்டால், அது குஜராத் அணிக்குச் சாதகமாக முடிந்துவிடும். 9 வெற்றிகளுடன் கம்பீரமாக முதலிடத்தில் இருக்கும் பெங்களூரு அணி, இந்தச் சறுக்கலை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications
