IPL 2026: MI அணி இந்த வீரர் மீது நம்பிக்கையை இழந்துவிட்டது? இனி யார் தான் மும்பைக்கு விக்கெட் எடுப்பார்- ஜாபர்
மும்பை: ஐபிஎல் 2026 தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ட்ரென்ட் போல்ட் மீதான நம்பிக்கை குறைந்துவிட்டதாக முன்னாள் ஆர்சிபி வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 16 அன்று மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஏழு விக்கெட் தோல்விக்குப் பிறகு அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.
இந்த சீசனில், போல்ட் மூன்று போட்டிகளில் பங்கேற்று ஒரு விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார். அவரது சராசரி 110.00 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 54.0 ஆகவும், எகானமி 12.22 ஆகவும் உள்ளது. இந்த மோசமான செயல்பாட்டினால், அவர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இருந்து நீக்கப்பட்டார்.

போட்டிக்குப் பிறகு தனது யூடியூப் சேனலில் பேசிய ஜாஃபர், போல்ட் முதல் ஓவரிலேயே விக்கெட்டுகளை வீழ்த்தும் 'வேகம்' முன்பு இருந்ததுபோல தற்போது இல்லை என்றார். மும்பை இந்தியன்ஸ் அணி அவரை களமிறக்குவதில் நம்பிக்கையை இழந்துவிட்டது என்றும், அணிக்கு விக்கெட்டுகளை யார் வீழ்த்துவார்கள் என்ற கவலை எழுவதாகவும் தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அவர், "ட்ரென்ட் போல்ட் முதல் ஓவரிலேயே விக்கெட் எடுக்கும் 'ஜம்ப்' தற்போது இல்லை. அவரை களமிறக்குவதில் மும்பை இந்தியன்ஸ் அணி சற்று நம்பிக்கையை இழந்துள்ளது. போல்ட் போன்ற ஒரு பந்துவீச்சாளர் வெளியே இருக்கிறார், அவரை விளையாட வைக்க உங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் நீங்கள் களமிறக்கும் மற்றவர்கள் விக்கெட் எடுக்கவில்லை என்றால் யார் விக்கெட் எடுப்பார்கள்?" என்று கூறினார்.
48 வயதான ஜாஃபர், தீபக் சாஹர் முதல் ஓவரிலேயே 20 ரன்களுக்கும் மேல் வழங்கியதையும், ஷர்துல் தாக்கூர் விக்கெட் வீழ்த்தும் திறமைகொண்டவராக இருந்தாலும், அதிக ரன்களைக் கொடுக்கும் வழக்கத்தைக் கொண்டவர் என்பதையும் சுட்டிக்காட்டினார். ரன் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தி, விக்கெட்டுகளை எடுப்பவர் யார் என அவர் கேள்வியெழுப்பினார்.
"அதற்கு மேல், தீபக் சாஹர் முதல் ஓவரிலேயே 20-25 ரன்கள் கொடுத்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராகவும் இது நடந்தது, இன்றும் நடக்கிறது. ஷர்துல் தாக்கூர் எப்போதும் அதிக ரன்கள் கொடுப்பவர் என்பது நமக்குத் தெரியும். விக்கெட் வீழ்த்தும் திறமை அவருக்கு இருந்தாலும், அவர் விலையுயர்ந்தவர். அப்படியானால் யார் விக்கெட் எடுப்பார்கள்? ரன்களை யார் கட்டுப்படுத்துவார்கள்?
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எல்லா பக்கங்களிலிருந்தும் பிரச்சனைகள் சூழ்ந்துள்ளதாகத் தெரிகிறது. இதை எப்படி சரிசெய்வார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் மிகவும் தீவிரமாக யோசிக்க வேண்டும்," என ஜாஃபர் குறிப்பிட்டார்.அதே விவாதத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியின் மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, அதிகமான மெதுவான பந்துகளையே நம்பியிருப்பதாகவும், தனது வழக்கமான சிறந்த நிலையில் இல்லை என்றும் வாசிம் ஜாஃபர் தெரிவித்தார்.
பும்ரா விக்கெட் எடுக்கவில்லை என்றால் அது கவலையளிக்கும் விஷயம் என்றும், அணிக்கு வெற்றிகளைப் பெற்றுத் தரும் பந்துவீச்சாளர் யார் என்ற கேள்வி எழுவதாகவும் கூறினார். "அவர் மெதுவான பந்துகளையே அதிகம் நம்பியிருப்பது போல் தெரிகிறது. பும்ராவிடம் பொதுவாக எதிர்பார்க்கப்படும் 140+ கிமீ வேகம் கொண்ட பந்துகளை அவர் அவ்வளவாக வீசுவதில்லை. என்ன பிரச்சனை என்று தெரியவில்லை, ஆனால் பும்ரா தனது சிறந்த நிலையில் இல்லை.
இது ஒரு கவலைக்குரிய விசயம், ஏனெனில் பல போட்டிகள் முடிந்துவிட்டன, அவர் இன்னும் விக்கெட் எடுக்கவில்லை. பும்ரா போன்ற ஒரு பந்துவீச்சாளர் விக்கெட் எடுக்கவில்லை என்றால், யார் எடுப்பார்கள்?" என்றார்.IPL 2026 தொடரில் ஐந்து போட்டிகளில் 19 ஓவர்கள் வீசிய பிறகு, பும்ரா இன்னும் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. அவரது எகானமி ரேட் 8.63 ஆக உள்ளது. ஐந்து போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, புள்ளிகள் பட்டியலில் வெறும் இரண்டு புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications