1 விக்கெட் வீழ்த்தியவருக்கு ஆட்டநாயகன் விருது.. 4 விக்கெட் வீழ்த்திய ரசிக்குக்கு ஒண்ணுமே இல்லை!
பெங்களூரு: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு வழங்கப்பட்ட 'ஆட்டநாயகன்' விருது தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. 4 விக்கெட்டுகளை அள்ளிய இளம் வீரர் ரசிக் சலாம் தாரை புறக்கணித்துவிட்டு, ஒரே ஒரு விக்கெட் எடுத்த ஜோஷ் ஹேசில்வுட்டுக்கு விருது வழங்கப்பட்டதன் பின்னணி குறித்துப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 146 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஆர்சிபி அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ரசிக் சலாம் தார் மிகச்சிறப்பாகப் பந்துவீசி 4 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளைச் சாய்த்தார். குறிப்பாக எய்டன் மார்க்ரம், ஆயுஷ் பதோனி, முகுல் சவுத்ரி போன்ற அதிரடி வீரர்களை அவர் வெளியேற்றினார். டி20 கிரிக்கெட்டில் 4 விக்கெட்டுகள் என்பது மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. பொதுவாக இத்தகைய சூழலில் அந்த வீரருக்கே ஆட்டநாயகன் விருது வழங்கப்படும்.

ஆனால், அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அவர் 4 ஓவர்களில் 20 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் மட்டுமே எடுத்திருந்தார். புவனேஷ்வர் குமார் கூட 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அப்படியிருக்க ஹேசில்வுட்டுக்கு ஏன் இந்த விருது வழங்கப்பட்டது என்ற கேள்வி எழுந்தது.
இதற்கு கிரிக்கெட் வல்லுநர்கள் சில முக்கிய காரணங்களைச் சுட்டிக்காட்டுகின்றனர். லக்னோ அணியின் மிகப்பெரிய 'மேட்ச் வின்னர்' நிக்கோலஸ் பூரன். எந்த நேரத்திலும் ஆட்டத்தின் போக்கை மாற்றும் வல்லமை கொண்ட அவரை, வெறும் 1 ரன்னில் ஹேசில்வுட் வீழ்த்தினார். அந்த ஒரு விக்கெட் தான் லக்னோ அணியின் ரன் வேகத்தை அடியோடு குறைத்தது.
மேலும், பேட்டிங்கிற்கு சாதகமான சின்னசாமி மைதானத்தில் 5.00 என்ற எகானமி விகிதத்தில் மிகவும் சிக்கனமாகப் பந்துவீசி லக்னோ பேட்டர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். ஹேசில்வுட் உருவாக்கிய அந்த நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு தான் ரசிக் தார் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தது.
இருப்பினும், ஒரு இளம் வீரர் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய போது அவருக்கு அங்கீகாரம் வழங்கப்படாதது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. "புள்ளிவிவரங்களை விட தாக்கமே (Impact) முக்கியம்" என்ற அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தாலும், ரசிக் தார் போன்ற வளரும் வீரர்களுக்கு இத்தகைய விருதுகள் மிகப்பெரிய ஊக்கமாக இருந்திருக்கும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது. இதற்கிடையே, ஆர்சிபி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications