IPL 2026: தோனி தந்த சிக்னல்.. உற்சாகத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்.. ஆனால் இதுதான் கடைசி மேட்ச்சா?
சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான மிக முக்கியமான ஆட்டத்தில், சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் தோனி களம் இறங்க அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அதை சூசகமாக சொல்லும் வகையில் தோனி வலைப்பயிற்சியில் சில சமிக்ஞைகளை காட்டினார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சேப்பாக்கத்தில் நடைபெறும் கடைசி போட்டி என்பதால், தனது 'ஆஸ்தான' மைதானத்தில் தோனி விளையாடுவதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
2026 ஐபிஎல் தொடர் தொடங்கியது முதல், கெண்டைக்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தோனி ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. சுமார் 2 மாதங்களாக ரசிகர்கள் ஏக்கத்தில் இருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தீவிர வலைப்பயிற்சியில் தோனி நீண்ட நேரம் பேட்டிங் செய்தது பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அவர் பந்துகளை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

கடைசிப் போட்டியா?
சேப்பாக்கம் மைதானம் தோனியின் கோட்டை என்று அழைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இந்த மைதானத்தில் அவர் பல வரலாற்று வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற உள்ள போட்டி இந்த சீசனில் சென்னையில் நடக்கும் கடைசி லீக் ஆட்டம் என்பதால், இதுவே சேப்பாக்கத்தில் தோனி விளையாடும் கடைசிப் போட்டியாக இருக்குமோ என்ற விவாதம் கிரிக்கெட் வட்டாரத்தில் எழுந்துள்ளது. ஒருவேளை தோனி களம் இறங்கினால், சேப்பாக்கம் மைதானமே அதிரப்போவது உறுதி.
பிளே-ஆப் கணக்கு
சிஎஸ்கே அணி தற்போது 12 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 6 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. ரன் ரேட் அடிப்படையில் +0.207 என்ற நிலையில் உள்ள சிஎஸ்கே அணிக்கு, பிளே-ஆப் வாய்ப்பைத் தக்கவைக்க இந்தப் போட்டியின் வெற்றி மிகவும் அவசியம். இக்கட்டான இந்தச் சூழலில் தோனியின் அனுபவம் மற்றும் வழிகாட்டுதல் அணிக்குத் தேவை என ரசிகர்கள் கருதுகின்றனர்.
இதுவரை தோனி விளையாடுவது குறித்து சிஎஸ்கே அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால், வலைப்பயிற்சியில் காட்டிய வேகம் மற்றும் உற்சாகம், தோனி சேப்பாக்கத்தில் விளையாடுவாரா? என்ற எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications
