IPL 2026: தீபாவளியில் ஐபிஎல்.. பிசிசிஐ அதிரடி ஆலோசனை.. அப்போ ஏப்ரல் - மே மாதத்தில் இல்லையா?
மும்பை: இந்தியாவில் கோடை காலத்தின் உச்சத்தில் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை, இனிவரும் காலங்களில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு மாற்ற பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. இதற்கான முக்கிய காரணங்களாக இந்தியாவின் கடும் வெப்பம் மற்றும் விளம்பரதாரர்களின் வர்த்தக நலன்கள் முன்வைக்கப்படுகின்றன.
தற்போது ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை நடத்தப்படுகிறது. இந்த 2 மாத கால இடைவெளியில் இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் கடும் வெயில் வாட்டி வதைப்பதால், வீரர்கள் மைதானத்தில் பெரும் உடல் சோர்வுக்கு ஆளாகின்றனர். மேலும், வரும் 2028-ம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. போட்டிகள் அதிகரிக்கும்போது, கோடை காலத்திலேயே நீண்ட நாட்கள் விளையாடுவது வீரர்களின் ஆரோக்கியத்திற்கு சவாலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

இது குறித்து ஐபிஎல் தலைவர் அருண் துமால் அளித்துள்ள பேட்டியில், "ஐபிஎல் தொடரின் காலத்தை மாற்றுவது குறித்து ஒளிபரப்பு நிறுவனங்களுடன் விரிவாக ஆலோசிக்க வேண்டும். செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் தொடரை நடத்துவது குறித்து ஒரு வலுவான பரிந்துரை வந்துள்ளது. வர்த்தக ரீதியாகப் பார்த்தால், தீபாவளி பண்டிகைக்கு முந்தைய அந்த காலகட்டம் விளம்பரதாரர்களுக்கு மிகவும் சாதகமான நேரமாகும். அடுத்த முறை போட்டிகளுக்கான ஒளிபரப்பு ஒப்பந்தங்கள் கோரப்படும்போது, இதற்கான வாய்ப்புகள் குறித்து தீவிரமாகப் பரிசீலிக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது 10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் தொடரில் மொத்தம் 74 போட்டிகள் நடத்தப்படுகின்றன. வரும் ஆண்டுகளில் போட்டிகளின் எண்ணிக்கை 84 அல்லது 94 ஆக உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு போட்டிகள் அதிகரிக்கும்போது, தட்பவெப்ப நிலை வீரர்களுக்குச் சாதகமாக இருக்க வேண்டும் என்பதில் பிசிசிஐ உறுதியாக உள்ளது.
பெரும்பாலான சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் மற்றும் இருதரப்பு போட்டிகள் குளிர் காலங்களில் திட்டமிடப்படுவதால், ஐபிஎல் தொடருக்கான புதிய காலக்கட்டத்தை முடிவு செய்வதில் மற்ற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களுடனும் ஆலோசிக்க வேண்டியுள்ளது. ஒருவேளை இந்த மாற்றம் அமலுக்கு வந்தால், 19 ஆண்டுகளாக கோடை காலத்தில் அரங்கேறி வரும் ஐபிஎல் திருவிழா, இனி தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக செப்டம்பர் - அக்டோபரில் நடைபெறும்.


Click it and Unblock the Notifications
