உலக கிரிக்கெட்டில் புதிய சரித்திரம்.. சாஹல் படைத்த பிரம்மாண்ட சாதனை.. ஒரே நாட்டில் 300 விக்கெட்டுகள்
நியூ சண்டிகர்: யுஸ்வேந்திர சாஹல் ஒரு புதிய டி20 சாதனையைப் படைத்துள்ளார். டி20 கிரிக்கெட் வரலாற்றில், ஒரே நாட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் முதல் வீரர் என்ற பெருமையை சாஹல் பெற்றுள்ளார். முல்லன்பூரில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய சாஹல் இந்த வரலாற்று மைல்கல்லை எட்டினார்.
இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசிய அவர், 36 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளைச் சாய்த்தார். அதிரடி வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல் மற்றும் ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் ஆகியோரை வீழ்த்தி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். இந்தச் சாதனையின் மூலம் சாஹல், சர்வதேச அளவில் ஒரு குறிப்பிட்ட நாட்டில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இந்தியாவில் இதுவரை 267 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சாஹல், 300 விக்கெட்டுகளைக் கடந்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் பியூஷ் சாவ்லா 289 விக்கெட்டுகளுடனும், இங்கிலாந்தின் டேனி பிரிக்ஸ் 288 விக்கெட்டுகளுடனும் உள்ளனர். புவனேஷ்வர் குமார் இந்தியாவில் 276 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தப் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளார்.
தற்கால கிரிக்கெட்டில் 'இம்பாக்ட் பிளேயர்' விதியால் பேட்டர்கள் அதிரடியாக விளையாடி 200-க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்து வருகின்றனர். இத்தகைய இக்கட்டான சூழலிலும், ஒரு சுழற்பந்து வீச்சாளராக சாஹல் தனது அனுபவத்தைப் பயன்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்துவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்துப் பேசிய சாஹல், "ஐபிஎல் தொடரில் பந்துவீசுவது எளிதல்ல, குறிப்பாக பேட்டர்களுக்கு சாதகமான விதிகள் இருக்கும்போது சவால்கள் அதிகம். ஆனால் சூழலுக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்வதே சிறந்தது" என்று தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வியைத் தழுவினாலும், புள்ளிப்பட்டியலில் 13 புள்ளிகளுடன் அந்த அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்ற கடைசிப் போட்டி இது என்பதால், சாஹலின் இந்தச் சாதனை அந்த மைதான ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத பரிசாக அமைந்தது. இனிவரும் போட்டிகளில் பஞ்சாப் அணி தர்மசாலாவில் விளையாட உள்ளது.


Click it and Unblock the Notifications