ஐ.பி.எல். ஏலம்-அதிக விலைக்கு ஏலம் போன கெளதம் காம்பீர்

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 8 அணிகள் பங்கேற்றன.
வீரர்கள் ஏலம் முறையில் அணிக்கு ஒப்பந்தம் செய்யப் பட்டதால் இந்தப்போட்டிக்கு அதிகமாக எதிர்பார்ப்பு இருந்தது. இதுவரை 3 ஐ.பி.எல். போட்டிகள் நடந்துள்ளன. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் (2008), டெக்கான் சார்ஜர்ஸ் (2009), சென்னை சூப்பர் கிங்ஸ் (2010) ஆகிய அணிகள் சாம்பியன் பட்டம் பெற்றன.
4வது ஐ.பி.எல் டுவண்டி-20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் ஏப்ரல் 8ம் தேதி முதல் மே 22ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
முதல் 3 ஐ.பி.எல். போட்டிகளுடன் இந்திய மற்றும் சர்வதேச வீரர்களுடனான ஒப்பந்தம் முடிவடைந்து விட்டதால் அனைத்து வீரர்களும் புதியதாக ஏலம் விடப்படுகிறார்கள்.
ஒப்பந்த விதிகளை மீறியதாக கிரிக்கெட் வாரியத்தால் நீக்கப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மும்பை உயர் நீதிமன்றத்தில் தடை வாங்கிவிட்டன.
மேலும் கொச்சி மற்றும் புனே அணிகள் இந்த முறை புதியதாக போட்டிகளில் பங்கேற்கவுள்ளன.
முந்தைய சீசனில் தங்கள் அணிக்காக விளையாடிய வீரர்களில் 4 பேரை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற விதியின்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகேந்திர சிங் டோணி, சுரேஷ் ரெய்னா, முரளி விஜய், மோர்கல் ஆகியோரையும்,
மும்பை இந்தியன்ஸ் அணி தெண்டுல்கர், ஹர்பஜன் சிங், மலிங்கா ஆகியோரையும்,
டெல்லி டேர்டெவில்ஸ் அணி வீரேந்திர ஷேவாக்கையும், வார்னேவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் தக்க வைத்துக் கொண்டுள்ளன.
இந்த 12 வீரர்களை தவிர மற்ற 350 வீரர்கள் ஏலம் இடப்படவுள்ளன. இன்று பெங்களூரில் தொடங்கிய ஏலம் நாளையும் நடக்கவுள்ளது.
ஒவ்வொரு அணியும் 30 வீரர்களை ஏலத்தில் எடுத்துக்கொள்ளலாம். இதற்கான தொகை ரூ.40.5 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
டெக்கான் சார்ஜர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், புதிய அணிகளான கொச்சி, புனே ஆகிய 5 அணிகளும் ரூ.40.5 கோடி வரை வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம். சென்னை, மும்பை அணி ஏற்கனவே தலா 4 வீரர்களை ரூ.20.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்து விட்டது. இதனால் அந்த 2 அணிகளும் ரூ.20.25 கோடி வரை வீரர்களை ஏலத்தில் எடுக்க வேண்டும்.
ராஜஸ்தான் அணி ரூ.25.6.கோடி வரைக்கும், டெல்லி டேர்டேவில்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் தலா ரூ.32.4 கோடி வரைக்கும் வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம். மொத்தம் ரூ.335 கோடிக்கு வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படுகிறார்கள்.
இன்றைய ஏலம்....
இன்றைய ஏலத்தில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் கெளதம் கம்பீரை அதிகபட்சமாக ரூ.11.04 கோடிக்கு நடிகர் ஷாருக் கானுக்கு சொந்தமான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி (கேகேஆர்) ஏலம் எடுத்துள்ளது.
இதே அணி யூசுப் பதானை ரூ.9.66 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
ரோஹித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.9.2 கோடிக்கு ஏலம் எடுத்தது. ராபின் உத்தப்பாவை புனே சஹாரா வாரியர்ஸ் ரூ.9.66 கோடிக்கு ஏலம் எடுத்தது.
ராகுல் திராவிடை ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.2.26 கோடிக்கும், ஆடம் கில்கிறிஸ்டை பஞ்சாப் லெவன் ரூ. 4.08 கோடிக்கும் ஏலம் எடுத்தன.
ஜாக் கல்லிஸை ரூ.5 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். ஆஸ்கிரேலியாவின் ஆன்ட்ரூ சைமண்ட்ஸ் ரூ.3.85 கோடிக்கு மும்பை அணி ஏலம் எடுத்தது.
இலங்கை கேப்டன் சங்கர்க்கராவை ரூ.3.17 கோடிக்கு டெக்கான் சார்ஜர்ஸ் ஏலம் எடுத்தது.
யுவராஜ் சிங்கை புனே வாரியர்ஸ் ரூ.8.28 கோடிக்கும், மஹேல ஜெயவர்தனாவை கொச்சி அணி ரூ.6.75 கோடிக்கும் ஏலம் எடுத்தன. ஏ.பி.டிவில்லியர்ஸை விஜய் மல்லையாவின் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ரூ.5.06 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஜகீர் கானை இதே அணி ரூ.4.14 கோடிக்கு எடுத்துள்ளது.
கங்குலியை யாரும் எடுக்கவில்லை:
நியூஸிலாந்து வீரர் ரோஸ் டெய்லரை ரூ.4.6 கோடிக்கு எடுத்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்.
இர்பான் பதானை டெல்லி டேர் டெவில்ஸ் ரூ.8.62 கோடிக்கு எடுத்துள்ளது.
பெங்களூர் நட்சத்திர ஹோட்டலில் பிரிட்டிஷ் ஏல நிபுணர் முன்னிலையில் நடந்த இந்த ஏலம் நேரடியாக டிவியில் ஒளிபரப்பப்பட்டது.
செளரவ் கங்குலியை முதல் சுற்று ஏலத்தில் யாரும் எடுக்கவில்லை.
ஐபிஎல் போட்டியில் முதன் முறையாக பங்கேற்றுள்ள புனே சஹாரா வாரியர்ஸ் அணி வாங்கிய முதல் வீரர் யுவராஜ் சிங் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல ஐபிஎல் போட்டியில் முதன் முறையாக பங்கேற்றுள்ள கொச்சி அணி வாங்கியுள்ள முதல் வீரர் ஜெயவர்த்தனே தான்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:43 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications