சர்வ சாதாரணமா 90 போடும் மேக்ஸ்வெல்.. 100ஐ தொட மாட்டேங்குறாரே...!
டெல்லி: சர்வ சாதாரணமாக நின்ற இடத்திலேயே நச்சு நச்சுன்னு 90 ரன்களையும், அதைத் தாண்டியும் அடித்து நொறுக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர் மேக்ஸ்வெல் 100 ரன்களை மட்டும் தவற விட்டு வருவது அவருக்குமே கூட லேசான ஏமாற்றமாகத்தான் இருக்கும்.
இதுவரை 3 முறை அவர் 90 ரன்களைத் தாண்டியுள்ளார். ஒரு முறை 89 ரன்களை எடுத்தார். ஆனால் சதம் மட்டும் அவரை தொடர்ந்து சத்தாய்த்து வருகிறது.
நடப்பு ஐபிஎல் தொடரின் ரன் மெஷினாக வலம் வரும் மேக்ஸ்வெல் எப்படியும் அடுத்த போட்டியில் சதம் போடுவார் என்ற நம்பிக்கையில் பஞ்சாப் ரசிகர்கள் உள்ளனர்.

செம ஸ்டிரைக்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 38 பந்துகளில் 90 ரன்களைக் குவித்தார் மேக்ஸ்வெல். அவரது ஸ்டிரைக் ரேட் 236.84 ஆக இருந்தது.

முதல் போட்டியிலும் சதம் மிஸ்
இதேபோல சென்னைக்கு எதிராக முதல் போட்டியில் சந்தித்தபோதும் கூட மேக்ஸ்வெல் 95 ரன்களை எடுத்தார். அப்போதும் அவருக்கு சதம் நழுவிப் போனது.

ராஜஸ்தானுக்கு எதிராக 89
அதேபோல ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் 89 ரன்களைக் குவித்தார். அப்போதும் சதம் தவறிப் போனது.

சன்ரைசர்ஸுக்கு எதிராக 95
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் அதிரடியாக ஆடி 95 ரன்களைக் குவித்தார் மேக்ஸ்வெல். அப்போதும் சதம் போனது.

தவற விட்ட மும்பை
இத்தனைக்கும் கடந்த ஐபிஎல் தொடரின்போது மும்பை அணியால் பெரும் விலைக்கு வாங்கப்பட்டவர் மேக்ஸ்வெ்ல். ஆனால் அந்தத் தொடரில் அவர் போட்டிகளில் அதிகம் பங்கேற்கவில்லை.. இந்த முறை பஞ்சாப் அணிக்கு வந்தார்.. வந்த வேகத்தில் வெளுத்தெடுத்து வருகிறார்.

ப்ரீத்தி ஹேப்பியோ ஹேப்பி அண்ணாச்சி..
மேக்ஸ்வெல் ஆட்டம் யாரைக் கலக்குகிறதோ இல்லையே பஞ்சாப் அணி உரிமையாளரான ப்ரீத்தி ஜிந்தாவை ரொம்பவே குஷிப்படுத்தியுள்ளது. உட்காரக் கூட முடியாமல் மேக்ஸ்வெல் ஆடுவதைப் பார்த்து குதித்து குதூகலித்த வண்ணம் இருக்கிறார் ப்ரீத்தி...


Click it and Unblock the Notifications