வேலையை விட்டு தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்க.. பாங்கரை மிரட்டினாரா பிரீத்தி ஜிந்தா?
டெல்லி: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளரான சஞ்சய் பாங்கரை, வீரர்களுக்கு முன்னால் அணியின் உரிமையாளரான பிரீத்தி ஜிந்தா அவமரியாதை செய்தார் என்றும் திட்டினார் என்றும் வேலையை விட்டு நீக்கி விடுவேன் என்று மிரட்டியதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்திய அணியியின் பயிற்சியாளராக சஞ்சய் பாங்கரை நியமிக்கலாம் என்று கூறும் அளவுக்கு சிறந்த பயிற்சியாளராக வலம் வருபவர் பாங்கர். அவரை பிரீத்தி ஜிந்தா அவமதித்து திட்டியதாக வந்துள்ள தகவல் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 1 ரன் வித்தியாசத்தில் தோலவியுற்றதால் விரக்தி அடைந்து பாங்கரை திட்டி விட்டார் பிரீத்தி என்கிறார்கள்.

வீரர்கள் முன்னிலையில்
போட்டி முடிந்ததும் கோபத்துடன் பாங்கரிடம் வந்த பிரீத்தி ஜிந்தா அவருடன் சரமாரியாக வாக்குவாதம் செய்துள்ளார். வீரர்கள் முன்னிலையில் பாங்கரை விமர்சித்துள்ளார். வேலையை விட்டு நீக்க நேரிடும் என்றும் பிரீத்தி கூறியதாக கூறப்படுகிறது.

நெசமாத்தான்
ஆனால் இப்படி நடக்கவில்லை என்று பிரீத்தியும், பாங்கரும் மறுத்து விட்டாலும் கூட, நடந்தது உண்மைதான் என்று அந்த சம்பவத்தை நேரில் பார்த்த நான்கு பேர் கூறியுள்ளதாக மும்பை மிர்ரர் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பயிற்சியாளர்தான் காரணம் -பிரீத்தி
அக்சர் படேலுக்கு முன்னதாக பர்ஹான் பஹர்தீனை பேட் செய்ய அனுப்பிய முடிவு பிரீத்திக்குப் பிடிக்கவில்லையாம். பயிற்சியாளரின் தவறான முடிவுகள்தான் தோல்விக்குக் காரணம் என்று பிரீத்தி விமர்சித்தாராம்.

கெட்ட வார்த்தை வேற
பிரீத்தி பேசும்போது நான்கு எழுத்தில் வரும் ஒரு கெட்ட வார்த்தையையும் பயன்படுத்தினாராம். மேலும் வேலையை விட்டு தூக்கிருவேன் என்று பாங்கரைப் பார்த்து அடிக்கடி அவர் மிரட்டியதால் வீரர்களே அதிர்ச்சியுடன் இருந்தனராம்.

எதிர்த்து யாருமே பேசலை
பிரீத்தி அவர் பாட்டுக்குப் பேசிக் கொண்டே இருக்க, யாருமே அவருக்கு எதிராக ஒரு வார்த்தையும் பேசவில்லையாம். பாங்கரோ பரிதாபமாக நின்று கொண்டிருந்தாராம்.

ரொம்பக் கேவலம்
பிரீத்தியின் இந்த செயல் மிகவும் கேவலமானது, ஒரு அணியின் உரிமையாளர் போல அவர் நடந்து கொள்ளவில்லை என்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் முகம் சுளித்தபடி கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications