IPL: 200 வீடியோக்களை அழித்த அர்ஷ்தீப் சிங்.. திலக் வர்மாவை தவறாக பேசியதால் வந்த சர்ச்சைதான் காரணமா?
சண்டிகர்: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான அர்ஷ்தீப் சிங், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த 200-க்கும் மேற்பட்ட வீடியோ பதிவுகளை அதிரடியாக நீக்கியுள்ளார். சமூக வலைதளங்களில் அண்மையில் அவர் வெளியிட்ட சில சர்ச்சைக்குரிய வீடியோக்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தனது பக்கத்தை அவர் முழுமையாக சுத்தப்படுத்தியுள்ளார். தற்போது அவரது பக்கத்தில் வெறும் 44 பதிவுகள் மட்டுமே உள்ளன. அவையும் பெரும்பாலும் விளம்பரங்கள் தொடர்பானவை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களாக அர்ஷ்தீப் சிங் வெளியிட்ட வீடியோக்கள் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தின. குறிப்பாக, ஸ்னாப்சாட் வீடியோ ஒன்றில் மும்பை இந்தியன்ஸ் வீரர் திலக் வர்மாவை நோக்கி அவர் இனவெறியைத் தூண்டும் வகையில் பேசியதாகக் கூறி ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து அர்ஷ்தீப் சிங் சமூக வலைதளங்களில் கடுமையான 'ட்ரோல்'களுக்கு உள்ளானார்.

இதுமட்டுமன்றி, மற்றொரு வீடியோவில் பஞ்சாப் அணியின் சக வீரர் யுஸ்வேந்திர சஹால் 'இ-சிகரெட்' புகைப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அர்ஷ்தீப் சிங் பதிவிட்ட வீடியோவில் இந்த காட்சி இடம் பெற்றதால், வீரர்களின் ஒழுக்கம் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இத்தகைய தொடர் சர்ச்சைகளால் மன உளைச்சலுக்கு ஆளான அர்ஷ்தீப், தற்போது தனது தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீக்கிவிட்டு, "சபர், ஷுக்கர், பஞ்சாப்" (பொறுமை, நன்றி, பஞ்சாப்) என்ற வாசகத்துடன் ஒரு புகைப்படத்தை மட்டும் பகிர்ந்துள்ளார்.
2026 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இது ஒரு சோதனையான ஆண்டாகவே முடிந்துள்ளது. தொடக்கத்தில் வரிசையாக 8 போட்டிகளில் வெற்றி பெற்று பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட பஞ்சாப் அணி, கடைசி நேரத்தில் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து வெளியேறியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடைசி நேரத்தில் பிளே-ஆப் வாய்ப்பைத் தட்டிச் சென்றது. ஆடுகளத்தில் ஏற்பட்ட தோல்வி ஒருபுறம் இருக்க, ஆடுகளத்திற்கு வெளியே கிளம்பிய சர்ச்சைகளால் அர்ஷ்தீப் சிங் தற்போது சமூக வலைதளங்களில் இருந்து சற்று ஒதுங்கியிருக்க முடிவு செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications