கொல்கத்தா: 2025 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக அஜின்க்யா ரஹானேவை நியமிக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அது மட்டும் நடந்தால் ஐபிஎல் தொடரிலேயே பிளேயிங் லெவனில் இருக்கும் வீரர்களில் மிகக் குறைந்த சம்பளம் வாங்கும் ஒருவர் கேப்டனாக செயல்படும் விசித்திர சம்பவம் நடந்தேறும்.
அஜின்க்யா ரஹானே கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று இருந்தார். 2023 ஐபிஎல் தொடரில் சிறப்பாக பேட்டிங் செய்து ரன் குவித்திருந்தார். சிஎஸ்கே அணி கோப்பை வென்றதில் அவருக்கும் முக்கிய பங்கு இருந்தது. எனினும், 2024 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் ஆடிய போது பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை.

இதை அடுத்து சிஎஸ்கே அவரை அணியில் இருந்து விடுவித்து இருந்தது. 2025 ஐபிஎல் ஏலத்திலும் அவரை சிஎஸ்கே அணி வாங்க முயற்சிக்கவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அஜின்க்யா ரஹானேவை அவரது அடிப்படை விலையான 1.50 கோடி ரூபாய்க்கு வாங்கி இருந்தது.
எனினும், அவர் அந்த அணியில் ஒரு மாற்று வீரராகவும், வீரர்கள் அறையில் இளம் வீரர்களுக்கு ஆலோசனை அளிக்கும் ஒரு அனுபவ வீரராகவும் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டனாக நியமிக்கும் முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
ஏனெனில், 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கோப்பை வென்று தந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அந்த அணியில் இருந்து விலகிச் சென்று இருக்கிறார். கொல்கத்தா அணியும் அவரை ஏலத்தில் வாங்கவில்லை. அவருக்கு மாற்றாக வேறு கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் கொல்கத்தா அணி உள்ளது.
2025 ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா அணியால் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வெங்கடேஷ் ஐயரை அந்த அணி கேப்டனாக நியமிக்கும் என முதலில் கூறப்பட்டது. அவரை 23.5 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா அணி வாங்கி இருந்தது. ஆனால், அவருக்கு கேப்டனாக போதிய அனுபவம் இல்லை என்பதால் மூத்த வீரரும், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சில போட்டிகளில் செயல்பட்டவருமான அஜின்க்யா ரஹானேவை கேப்டனாக்க முடிவு செய்துள்ளது கொல்கத்தா அணி.
இதில் வேடிக்கை என்னவென்றால் அவரை கேப்டனாக நியமித்தால் பிளேயிங் லெவனில் இடம் பெற்றிருக்கும் வீரர்களிலேயே அவருக்கு தான் சம்பளம் மிகவும் குறைவாக இருக்கும். அஜின்க்யா ரஹானே 1.50 கோடி ரூபாய் சம்பளம் வாங்க உள்ள நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அவரை விட குறைவான சம்பளம் வாங்கும் வீரர்களின் எண்ணிக்கை ஐந்து மட்டுமே.
மயங்க் மார்க்கண்டே (30 லட்சம்), மணிஷ் பாண்டே (75 லட்சம்), லவ்னித் சிசோடியா (30 லட்சம்), அனுகுல் ராய் (40 லட்சம்), உம்ரான் மாலிக் (75 லட்சம்) ஆகிய ஐந்து வீரர்கள் மட்டுமே அஜின்க்யா ரஹானேவை விட குறைந்த சம்பளம் வாங்கும் வீரர்கள்.
அதிக நட்சத்திர வீரர்களை கொண்ட கொல்கத்தா அணியில் இந்த ஐவருக்கும் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைப்பது கடினம் என்பதால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் அஜின்க்யா ரஹானே சம்பளம் குறைவாக இருக்கும். அவரை கேப்டனாக நியமித்தால் மிகக்குறைவான சம்பளத்தை கொண்ட கேப்டனாக அவர் விளையாடுவார்.
2025 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் பட்டியல் -
ரிங்கு சிங் - 13 கோடி
சுனில் நரைன் - 12 கோடி
வருண் சக்ரவர்த்தி - 12 கோடி
ஆண்ட்ரே ரஸ்ஸல் - 11 கோடி
ஹர்ஷித் ராணா - 4 கோடி
ரமன்தீப் சிங் - 4 கோடி
வெங்கடேஷ் ஐயர் - 23.5 கோடி
குயின்டன் டி காக் - 3.6 கோடி
ரஹ்மானுல்லா குர்பாஸ் - 2 கோடி
அன்ரிச் நார்ட்ஜே - 6.5 கோடி
அங்கிரிஷ் ரகுவன்ஷி - 3 கோடி
வைபவ் அரோரா - 1.8 கோடி
மயங்க் மார்கண்டே - 30 லட்சம்
ரோவ்மேன் பாவல் - 1.50 கோடி
மனீஷ் பாண்டே - 75 லட்சம்
ஸ்பென்சர் ஜான்சன் - 2.80 கோடி
லுவ்னித் சிசோடியா - 30 லட்சம்
அனுகுல் ராய் - 40 லட்சம்
அஜின்க்யா ரஹானே - 1.5 கோடி
மொயீன் அலி - 2 கோடி
உம்ரான் மாலிக் - 75 லட்சம்