மும்பை : ஐபிஎல் 2025 மெகா ஏலம் வரும் நவம்பர் 24 மற்றும் 25ஆம் தேதி சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடைபெற இருக்கின்றது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதுவரை 10 அணிகள் ஏலத்திற்கு முன்பே 46 வீரர்களை மொத்தமாக தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதில் அதிகபட்சமாக பஞ்சாப் அணி 110 கோடியே 50 லட்சம் ரூபாய் உடன் மெகா ஏலத்தில் பங்கேற்கிறது. அதன் பிறகு ஆர்சிபி அணி 83 கோடி ரூபாயும், குஜராத் 69 கோடி ரூபாயும், சிஎஸ்கே 55 கோடி ரூபாயும், மும்பை இந்தியன்ஸ் 45 கோடி ரூபாயுடன் ஏலத்தில் பங்கேற்கிறது.

இந்த மெகா ஏலத்தில் மொத்தம் 1574 வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் 409 வீரர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். இதில் ஒவ்வொரு நாட்டிலும் எத்தனை வீரர்கள் ஏலத்தில் தங்களது பெயரை பதிவு செய்து இருக்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம். தென்னாப்பிரிக்காவில் இருந்து அதிகபட்சமாக 91 வீரர்களும், ஆஸ்திரேலியாவிலிருந்து 76 வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.
இங்கிலாந்தில் இருந்து 52 வீரர்களும், நியூசிலாந்தில் இருந்து 39 வீரர்களும், வெஸ்ட் இண்டீஸ் இல் இருந்து 33 வீரர்களும், இலங்கையிலிருந்து 29 வீரர்களும், ஆப்கானிஸ்தானில் இருந்து 29 வீரர்களும்,வங்கதேசத்திலிருந்து 13 வீரர்களும், நெதர்லாந்தில் இருந்து 12 வீரர்களும், அமெரிக்காவிலிருந்து பத்து வீரர்களும், அயர்லாந்தில் இருந்து 9 வீரர்களும் பங்கேற்கின்றனர்.
இதே போன்று, ஜிம்பாபேவில் இருந்து எட்டு வீரர்களும் கனடாவில் இருந்து நான்கு வீரர்களும் ஸ்காட்லாண்டில் இருந்து இரண்டு வீரர்களும் இத்தாலியிலிருந்து ஒரு வீரரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து ஒரு வீரரும் இந்த ஏலத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். வழக்கம்போல் பாகிஸ்தானில் இருந்து ஒரு வீரரும் இந்த ஏலத்தில் பதிவு செய்யவில்லை. ஏனென்றால் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே அரசியல் ரீதியான பிரச்சனை இருந்து வருகிறது.
இதனால், பாகிஸ்தான் வீரர்கள் கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க வாய் மூலமாக தடை இருக்கின்றது. இதனால் எந்த பாகிஸ்தான் வீரர்களும் ஐபிஎல் தொடருக்கு பெயர் தருவதில்லை. ஆனால் 2008 ஆம் ஆண்டு சீசனில் பல பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்றனர்.அதேபோல் ஒரு நிலை மீண்டும் வரவேண்டும் என்றும் கிரிக்கெட் ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.