IPL Auction: பெரிய தொகைக்கு அஸ்வினை வாங்கிய சிஎஸ்கே.. வரலாறு திரும்பியது.. ரசிகர்கள் கொண்டாட்டம்
ஜெட்டா: ரவிச்சந்திரன் அஸ்வின் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பினார். 2009 முதல் 2015 வரை சிஎஸ்கே அணியில் இடம் பெற்று இருந்த அஸ்வின் அதன் பின் பல்வேறு ஐபிஎல் அணிகளில் இடம் பெற்று வந்தார்.
2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் அஸ்வின் இடம் பெற்ற நிலையில், சிஎஸ்கே அணி அவரை 9.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது. அஸ்வினை வாங்க ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. 9.50 கோடி வரை ஏலம் கிட்ட ராஜஸ்தான் அணி அதன் பின் பின்வாங்கியது.

விடாப் பிடியாக அஸ்வினை வாங்க முயன்ற சிஎஸ்கே அணி 9.75 கோடி ரூபாய்க்கு அவரை வாங்கியது. ஒன்பது ஆண்டுகளுக்கு பின் சிஎஸ்கே அணிக்கு திரும்பி இருக்கும் அஸ்வினை ரசிகர்கள் வரவேற்று பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரும்பாலான போட்டிகளை தனது சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் தான் விளையாடும். அஸ்வின் இளம் வயது முதல் சேப்பாக்கம் மைதானத்தில் அதிக போட்டிகளை ஆடியதால் அவரது விருப்பமான மைதானமாக அது உள்ளது. தற்போது சிஎஸ்கே அணியில் அஸ்வின் இடம் பெற்று இருப்பதால் சேப்பாக்கம் மைதானத்தில் அவரின் அனுபவத்தை காணலாம் என சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு ரவிச்சந்திரன் அஸ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உயர் திறன் செயல் மையத்தின் உயர் பதவியிலும் நியமிக்கப்பட்டு இருந்தார். அப்போதே அவர் சிஎஸ்கே அணிக்கு திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. அதற்கேற்ப சிஎஸ்கே அணி ஏலத்தில் அஸ்வினுக்காக கடைசி வரை நின்று அவரை வாங்கி உள்ளது.
ரச்சின் ரவீந்திரா, டெவான் கான்வே போன்ற தங்களின் மற்ற வீரர்களையும் சிஎஸ்கே அணி ஏலத்தில் வாங்கியது. ரச்சின் ரவீந்திராவை 4 கோடி ரூபாய்க்கும், டெவான் கான்வே-வை 6.25 கோடி ரூபாய்க்கும் வாங்கியது சிஎஸ்கே அணி. ராகுல் திரிபாதியை 3.40 கோடி ரூபாய்க்கு வாங்கியது சிஎஸ்கே அணி.


Click it and Unblock the Notifications