ஜெட்டா : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு மெகா ஏலம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் சுற்று நாட்டின் சிறந்த வீரர்களான ரிஷப் பண்ட் ஸ்ரேயாஸ் ஐயர், அர்ஸ்தீப் சிங் மற்றும் வெளிநாட்டு வீரர்களான ஜாஸ் பட்லர், மிட்செல் ஸ்டார்க், ரபடா ஆகியோர் ஏலம் போனார்கள்.
ஸ்ரேயாஸ் ஐயரை பஞ்சாப் அணி 26 கோடியே 75 லட்சம் ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்து சாதனை படைத்தது. அந்த சாதனையை சில நிமிடங்களிலே ரிஷப் பண்ட் உடைத்தார். அவர் லக்னோ அணியால் 27 கோடி ரூபாய் வரை ஏலத்தில் எடுக்கப்பட்டு புதிய ரெக்கார்டை படைத்தார்.

இந்த நிலையில் சிஎஸ்கே, மும்பை அணிகள் வழக்கம் போல் மிச்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த தருணத்தில் யாருமே கவனிக்காத வகையில் குஜராத் அணி சைலன்டாக ஒரு சம்பவத்தை செய்திருக்கிறது. குஜராத் அணி ஏற்கனவே கில், சாய் சுதர்சன், ஷாருக்கான், ராகுல் திவாட்டியா, ரசித் கான் போன்ற வீரர்களை தக்க வைத்துக் கொண்டிருந்தது.
இந்த சூழலில் குஜராத் அணி ரபாடாவை 10 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருக்கிறது. இதன் மூலம் குஜராத் அணியின் வேகப்பந்து வீச்சு வலுவாக மாறி இருக்கிறது. இதுபோன்று யாருமே எதிர்பார்க்காத வகையில் ஜாஸ் பட்லரை 15 கோடியே 75 லட்சம் ரூபாய் கொடுத்து குஜராத் அணி ஏலத்தில் எடுத்திருக்கிறது. இதன் மூலம் குஜராத் அணிக்கு தொடக்க வீரர் மற்றும் விக்கெட் கீப்பர் ஆகியோர் கிடைத்திருக்கிறார்கள்.
இதன் மூலம் லக்னோ அணியும் பஞ்சாப் அணியும் ஒரே வீரருக்கு 25 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்த நிலையில் குஜராத் அணி அதே பணத்தை வைத்து இரண்டு வீரர்களை வாங்கியிருக்கிறது. இதன் மூலம் குஜராத் அணியிடம் தற்போது 42 கோடியே 50 லட்சம் ரூபாய் பணம் என்று இருக்கிறது. அவர்களிடம் மொத்தம் ஏழு வீரர்கள் இதுவரை இருக்கிறார்கள். இதனால் குஜராத் அணி சிறப்பாக காய் நகர்த்தி இருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் பாராட்டி இருக்கிறார்கள்.