IPL Auction: அம்பானியின் மாஸ்டர்மைன்ட்.. டாப் பவர்பிளே பவுலர்களை தூக்கிய மும்பை இந்தியன்ஸ்
ஜெட்டா: 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி சிஎஸ்கே வீரர் என முத்திரை குத்தப்பட்ட தீபக் சாஹரை 9.25 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. இது தவறான முடிவு என சில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வரும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் மிகப்பெரிய திட்டத்தை கட்டமைத்து அதன் பின்னணியில் தான் தீபக் சாஹரை வாங்கி உள்ளது தெரிய வந்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி எப்போதுமே வேகப் பந்துவீச்சாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும். ஏனெனில், மும்பை இந்தியன்ஸ் அணியின் சொந்த மைதானமான வான்கடே மைதானம் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதுதான். இந்த நிலையில் ஐபிஎல் மெகா ஏலத்தின் முதல் நாள் அன்று மும்பை இந்தியன்ஸ் அணி, நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ட்ரென்ட் போல்ட்டை 12.50 கோடிக்கு வாங்கி இருந்தது.

அவர் இதற்கு முன்னரும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் பவர்பிளே ஓவர்களில் புதிய பந்தில் விக்கெட்களை வீழ்த்துவதில் வல்லவராக இருக்கிறார். இந்த நிலையில் தான் அவருக்கு ஜோடியாக பவர்பிளே ஓவரில் பந்து வீச தீபக் சாஹரை வாங்கி உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.
குறிப்பாக அந்த அணியின் உரிமையாளர் ஆனந்த் அம்பானி தீபக் சாஹரை வாங்குவதில் உறுதியாக இருந்தார். ஏலத்தின் போது சிஎஸ்கே அணி மற்ற வேகப் பந்துவீச்சாளர்களுக்கு ஆறு கோடிக்கு மேல் ஏலம் கேட்கத் தயங்கிய நிலையில், தீபக் சாஹரை வாங்க 9 கோடி வரை ஏலம் கேட்டது. அதற்கு முக்கிய காரணம், அவர் பவர் பிளே ஓவர்களில் அதிக விக்கெட்களை வீழ்த்தி இருப்பதுதான்.
எனினும் மும்பை இந்தியன்ஸ் அணி 9.25 கோடி ரூபாய் வரை ஏலம் கேட்டதால் சிஎஸ்கே அணி பின் வாங்கியது. கடந்த ஆறு ஐபிஎல் தொடர்களில் மட்டும் டிரென்ட் போல்ட் பவர்பிளே ஓவர்களில் 59 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். தீபக் சாஹர் கடந்த ஆறு ஐபிஎல் தொடர்களில் 57 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.
தீபக் சாஹர் 2022 ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் பவர்பிளே ஓவர்களில் அதிக விக்கெட்களை வீழ்த்தி இருப்பதாலேயே மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் ஆனந்த் அம்பானி இவர்களை குறி வைத்து வாங்கி இருக்கிறார். இதன் மூலம் 2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சிறந்த பவர்பிளே பந்து வீச்சு தாக்குதலை கொண்ட அணியாக மாறி உள்ளது.


Click it and Unblock the Notifications