சென்னை: சிஎஸ்கே அணியால் ரீடெய்ன் செய்யப்பட்டதன் மூலமாக எனது கனவு நிறைவேறி இருப்பதாக இளம் வீரர் மதீஷா பதிரானா தெரிவித்துள்ளார். தோனியுடன் மீண்டும் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட உள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய அவர், அடுத்த சீசனில் விளையாட ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நாளை சவுதி அரேபியாவின் ஜெடா நகரில் நடக்கவுள்ளது. ஏற்கனவே 10 அணிகளின் நிர்வாகிகளும் ஜெடா நகரில் முகாமிட்டுள்ள நிலையில், எந்த வீரரை எந்த அணி வாங்கும் என்ற எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. இதில் சிஎஸ்கே அணியை பொறுத்தவரை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஜடேஜா, பதிரானா, சிவம் துபே மற்றும் தோனி ஆகிய 5 வீரர்களையும் தக்க வைத்துள்ளது.

இதனால் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி ரூ.55 கோடி பர்ஸ் தொகையுடன் பங்கேற்க உள்ளது. இதில் பதிரானா ரீடெய்ன் செய்யப்படுவாரா என்ற சந்தேகம் இருந்த நிலையில், ரூ.13 கோடிக்கு ரீடெய்ன் செய்து சிஎஸ்கே அணி நிர்வாகம் ஆச்சரியம் கொடுத்துள்ளது. 2022 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக இளம் வீரர் பதிரானா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
அந்த சீசனில் 2 போட்டிகளில் விளையாடி 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய அவர், 2023 சீசனில் 12 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதேபோல் 2024 சீசனில் 6 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஒவ்வொரு சீசனில் பதிரானாவின் பவுலிங் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.
அதுமட்டுமல்லாமல் மும்பை அணிக்கு எப்படி பும்ரா இருக்கிறாரோ, அதேபோல் சிஎஸ்கே அணிக்கு பதிரானா இருக்கிறார் என்று பார்க்கப்படுகிறது. டெத் ஓவர்களில் பதிரானாவின் பவுலிங்கை எதிர்கொள்வதில் பேட்ஸ்மேன்கள் பலரும் திண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் சிஎஸ்கே அணியால் ரீடெய்ன் செய்யப்பட்டது குறித்து மதீஷா பதிரானா முதல்முறையாக மனம் திறந்துள்ளார்.
அதில் பதிரானா பேசுகையில், சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் தொடரில் அறிமுகமாகும் போது, அடுத்தடுத்த சீசனிலும் ரீடெய்ன் செய்யப்பட வேண்டும் என்பதே எனது இலக்காகவும், கவவாகவும் இருந்தது. தற்போது அந்த கனவு நிறைவேறி இருப்பதாக நினைக்கிறேன். சிஎஸ்கே அணியால் ரீடெய்ன் செய்யப்பட்டது மகிழ்ச்சியான விஷயம். அதனை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
தொடர்ந்து இந்த சீசனிலும் தோனியுடன் இணைந்து விளையாட உள்ளேன். தோனியுடன் விளையாடும் போது எப்படி இருக்கும் என்று அனைவரும் அறிந்தது தான் என்று தெரிவித்துள்ளார். கடந்த சில சீசன்களாக பதிரானா மீது தோனி அதிகளவில் அக்கறை கொண்டிருந்தார். அவரின் குடும்பத்தினரை சந்தித்து பதிரானாவின் எதிர்காலத்தை பற்றி கவலை கொள்ள வேண்டாம் என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது.