IPL Auction: ஓரங்கட்டப்பட்ட ப்ரீத்தி.. ஆட்டத்தை மாற்றிய ரிக்கி பாண்டிங்.. ஏலத்தில் என்ன நடந்தது?
ஜெட்டா: 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி அனைத்து அணிகளுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியது. அந்த அணியிடம் மற்ற அணிகளை விட அதிக மீதத் தொகை இருந்ததை அடுத்து அனைத்து முக்கிய வீரர்களையும் அந்த அணி ஏலத்தில் வாங்க முயன்றது. ஆனால், இந்த பரபரப்புக்கு மத்தியில் அந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தா ஓரமாக அமர்ந்து இருந்தார்.
கடந்த ஐபிஎல் ஏலங்களில் ப்ரீத்தி ஜிந்தா பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், இந்த முறை அவர் ஓரங்கட்டப்பட்டு இருக்கிறார். அவருக்கு பதிலாக சக உரிமையாளர்களான நெஸ் வாடியா மற்றும் மோஹித் பர்மன் ஆகிய தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் உடன் இணைந்து ஏலத்தில் வீரர்களை வாங்குவதில் முக்கிய முடிவுகளை எடுத்தனர்.

2025 ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் 110.50 கோடி மீதத் தொகை இருந்தது. மற்ற அணிகளை விட பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் அதிக தொகை இருந்தது. அதனால், அந்த அணி ஏலத்தில் முன்னணியில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அது உண்மையாகவும் மாறியது.
முக்கிய வீரர்களான அர்ஷ்தீப் சிங் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரை அந்த அணி ஏலத்தில் வாங்கியது. அப்போது ப்ரீத்தி ஜிந்தா அமைதியாக, ஓரமாக அமர்ந்து இருந்தார். கடந்த ஏலங்களில் ப்ரீத்தி ஜிந்தா நடவடிக்கைகளை பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர் கூட்டம் இருந்த நிலையில், இந்த முறை அவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் இந்த ஆண்டு நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் தான் ஐபிஎல் ஏலத்தில் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். பஞ்சாப் கிங்ஸ் அணி அர்ஷ்தீப் சிங்கை 18 கோடிக்கும், ஸ்ரேயாஸ் ஐயரை 26.75 கோடிக்கும் வாங்கியது.
ஸ்ரேயாஸ் ஐயரை பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டனாக நியமிக்க வாய்ப்பு உள்ளது. 2024 ஐபிஎல் கோப்பை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications