மும்பை: டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் உரிமையாளர்கள் கூறிய விமர்சனத்தை ஏற்க முடியாத ரிஷப் பண்ட் அந்த அணியில் இருந்து விலகும் முடிவை எடுத்ததோடு, தன்னை எழுத்தில் வாங்க வேண்டாம் எனவும் கூறிய சம்பவம் தற்போது வெளியாகி உள்ளது. இதை டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பார்த் ஜிண்டால் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
ரிஷப் பண்ட் தான் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை விட்டு விலகினார் என்றும், என்ன நடந்தது என்றும் விளக்கம் அளித்து பேட்டி அளித்து இருக்கிறார் பார்த் ஜிண்டால். 2025 ஐபிஎல் ஏலத்திற்கு முன் ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அப்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இரண்டு உரிமையாளர்களில் ஒருவர் தான் ரிஷப் பண்ட்டை அணியில் இருந்து விடுவிக்கும் முடிவை எடுத்ததாகவும் பேசப்பட்டு வந்தது.

2025 ஐபிஎல் ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 27 கோடி ரூபாய்க்கு ரிஷப் பண்ட்டை வாங்கியது. ஏலத்தில் டெல்லி அணி பண்ட்டை வாங்க முயற்சிக்காது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென டெல்லி அணி அவரை வாங்க ஆர்டிஎம் அட்டையை பயன்படுத்தியது. ஆனால், லக்னோ அணி 27 கோடி என விலை கூறியதால் டெல்லி அணி பின்வாங்கியது. இது பற்றி கேள்வி எழுப்பிய போது தான் பார்த் ஜிண்டால் பின்னணியில் நடந்த விவகாரங்களை போட்டு உடைத்தார்.
டெல்லி கேப்பிடல்ஸ் உரிமையாளர் பார்த் ஜிண்டால் பேசிய முழுமையான பதிவை இங்கே பார்க்கலாம்.
"கங்குலிக்கு பின் எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் தான். எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரரை நான் இழந்து விட்டேன். இருந்தாலும் அவர்தான் எனக்கு பிடித்த வீரராக இருப்பார். அவர் ஏலத்தின் பெரிய தொகைக்கு வாங்கப்பட்டது எனக்கு மகிழ்ச்சி தான். நாங்கள் ரிஷப் பண்ட்டை தக்க வைக்காத போதே அவரை இழந்து விட்டோம். எனவே, நாங்கள் ஏலத்தில் அவரை வாங்க முயன்று இருந்தோம் என சொல்லி கேலிக்குரியவர்களாக மாற விரும்பவில்லை."
"நாங்கள் 27 கோடி ரூபாய்க்கு ரைட் டூ மேட்ச் பயன்படுத்தி அவரை வாங்கி இருந்தால் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஏலம் முழுவதும் நாசமாகி இருக்கும். ரிஷப் பண்ட்டை நாங்கள் 18 கோடிக்கு தக்க வைப்பதற்கும், ஏலத்தில் 27 கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. ரிஷப் பண்ட் அணியை விட்டு விலகியதற்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இரண்டு உரிமையாளர்கள் இருப்பது காரணம் அல்ல. எங்கள் அணியின் உரிமையாளர்களாக நாங்கள் ஒற்றுமையாக, ஒரே சிந்தனையுடன் இருக்கிறோம்."
"நாங்கள் ரிஷப் பண்ட் உடன் நிறைய விவாதித்தோம். கடந்த சில சீசன்களில் ரிஷப் பண்ட்-இடம் நாங்கள் சில விஷயங்களை எதிர்பார்த்தோம். அது எங்களுக்கு கிடைக்கவில்லை. அதைப் பற்றி நாங்கள் அவரிடம் எங்கள் கருத்துக்களை கூறினோம். ஜே எஸ் டபிள்யூ (JSW) மற்றும் ஜி எம் ஆர் (GMR) ஆகிய டெல்லி கேப்பிடல்ஸ் உரிமையாளர் நிறுவனங்களாகிய நாங்கள் அனைவரும் ஒரே குடும்பமாக, ஒன்றாகத்தான் இருக்கிறோம். நாங்கள் இணைந்து தான் ரிஷப் பண்ட்-இடம் அந்தக் கருத்தை கூறினோம். ஆனால், அவர் அதை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் நினைத்தோமோ, அது நடக்கவில்லை. ரிஷப் பண்ட் உணர்ச்சிவசப்பட்டு விலகும் முடிவை எடுத்தார்."
"அவர் இந்த (டெல்லி) அணியில் இளம் வீரராக தனது பயணத்தை துவக்கினார். நாங்கள்தான் அவருக்கு முதல் வாய்ப்பை அளித்தோம். ஆனால், அவர் அணியை விட்டு விலகியதை நான் விரும்பவில்லை. நாங்கள் நீண்ட விவாதத்தில் ஈடுபட்டோம். அதன் முடிவில் ரிஷப் பண்ட் டெல்லி அணியில் நீடிக்க விரும்பவில்லை. மற்றொரு உரிமையாளரான கிரண் மற்றும் நான், அவரை தக்க வைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டோம். ஆனால், பண்ட் வேறு பாதையில் செல்ல விரும்பினார்."
"அதன் முடிவில் நாங்கள், "ரிஷப், நாங்கள் உன்னை ஏலத்தில் வாங்க மாட்டோம்." என்று அவர் கேட்டபடி உறுதி அளித்தோம். ஆனால், ஏலத்தில் எங்கள் இதயம் அவரை வாங்க வேண்டும் என்றது. அவரை வாங்கவும் முயற்சி செய்தோம். ஆனால், அவரது விலை மிகவும் அதிகமாக இருந்தது."
"ரிஷப் பண்ட் டெல்லி அணியில் தொடர விரும்பாத நிலையிலும் நாங்கள் அவரை ஏலத்தில் வாங்க முயன்றதற்கு பின் நடந்தது இதுதான். ரிஷப் பண்ட்டை ஏலத்தில் வாங்க வேண்டும் என எங்கள் இதயம் சொன்னது. மற்றொரு உரிமையாளரான கிரண் குமார் கிராந்தி, "ரிஷப் பண்ட்டை நாம் இப்போது ஏலத்தில் வாங்கலாம். அதன் பின் அவருடன் அமர்ந்து பேசி அவரை சமாதானம் செய்யலாம்." என்றார். அதனால் தான் அவரிடம் வாங்க மாட்டோம் என்று சொல்லிவிட்டு, ஏலத்தில் வாங்க முயன்றோம்."
"ரிஷப் பண்ட்டை வாங்க வேண்டும் என்பது எங்களின் உணர்வுப்பூர்வமான ஒரு முடிவு தான். ஆனால், அது நடக்கவில்லை." என்றார் பார்த் ஜிண்டால். இதன் மூலம், ரிஷப் பண்ட் தான் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை விட்டு விலகும் முடிவை எடுத்ததும், தன்னை ஏலத்தில் வாங்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதும் வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது.