டெல்லி: ரிஷப் பண்ட் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருப்பதாகவும். அதற்கு ஐபிஎல் அணிகளில் கேப்டனாக இருப்பதே முதல் படி எனவும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் உரிமையாளர் பார்த் ஜிண்டால் பேசி இருக்கிறார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருந்து பண்ட்டை விடுவித்தது குறித்து அளித்த பேட்டியில் இது பற்றி பேசி இருக்கிறார் பார்த் ஜிண்டால்.
2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு இருந்தார். அவர் ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியால் 27 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார். ஏலத்தின் முடிவில் பேசிய பார்த் ஜிண்டால் டெல்லி அணியின் உரிமையாளரான தானும், கிரண் குமாரும் ரிஷப் பண்ட்டின் கடந்த கால செயல்பாடு பற்றி அதிருப்தி தெரிவித்ததாக கூறினார்.

டெல்லி அணிக்காக அவர் முன்வந்து சில செயல்களை செய்ய வேண்டும் என தாங்கள் எதிர்பார்த்ததை அவர் செய்யாதது பற்றி அந்த விமர்சனம் இருந்ததாகவும் கூறினார். அந்த விமர்சனத்தை ரிஷப் பண்ட் ஏற்றுக்கொள்ளாமல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருந்து விலகும் முடிவை எடுத்ததாகவும், அதனாலேயே தாங்கள் அவரை விடுவித்ததாகவும் கூறி இருந்தார். தற்போது, மேலும் ஒரு முக்கிய தகவலை அவர் கூறி இருக்கிறார்.
"ரிஷப் பண்ட்டின் குறிக்கோள் என்ன என்பது எங்களுக்கு தெரியும். அவர் தன் வாழ்க்கையில் எங்கே செல்ல நினைக்கிறார்? என்பதும் எங்களுக்கு தெரியும். அவர் இந்திய அணியின் கேப்டனாக வேண்டும் என்ற தனது கனவை எங்களிடம் தெளிவாக சொன்னார். அது ஒரு ஐபிஎல் அணியின் கேப்டன் ஆவதில் இருந்து தான் தொடங்குகிறது." என்று பார்த் ஜிண்டால் கூறி இருக்கிறார்.
அக்சர் பட்டேலை டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ஆக்க பேச்சுவார்த்தை நடந்திருக்கலாம் என்பதையும் அவர் சூசகமாக கூறினார். "அக்சர் பட்டேல் எங்கள் அணியுடன் நீண்ட காலமாக இருக்கிறார். அவர் எங்கள் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு உள்ளார். டி20 கிரிக்கெட்டில் சிறந்த ஆல் ரவுண்டராக இருக்கிறார். அவர் அணியின் துணை கேப்டனாக சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார். ரிஷப் பண்ட் இல்லாத நேரங்களில் அவர் அணியை வழிநடத்தி இருக்கிறார். அவர் 2025 ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட வாய்ப்பு உள்ளவர். ஆனால், இது குறித்து நான் யாரிடமும் இன்னும் பேசவில்லை." என்றார் ஜிண்டால்.