வரலாறு படைத்த ஸ்ரேயாஸ் ஐயர்.. மிட்சல் ஸ்டார்க் சாதனை முறியடிப்பு.. ரூ.26.75 கோடி கொடுத்த பஞ்சாப்!
ஜெடா: ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக தொகை கொடுத்து வாங்கப்பட்ட வீரர் என்ற -பெருமையை இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றுள்ளார். அவரை வாங்குவதற்கு டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே மிகப்பெரிய யுத்தம் நடைபெற்றது.
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் தொடங்கியுள்ளது. கடந்த சீசனில் கேகேஆர் அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், அந்த அணியால் ரீடெய்ன் செய்யப்படவில்லை. இதனால் மெகா ஏலத்தில் அவருக்கு எவ்வளவு தொகை கொடுத்து எந்த அணியால் வாங்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது.

அதற்கேற்ப சையத் முஷ்டாக் அலி தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் 47 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இந்த நிலையில் மெகா ஏலத்தில் 3வது வீரராக ஸ்ரேயாஸ் ஐயர் ஏலத்திற்கு விடப்பட்டார். அப்போது கேகேஆர் அணி அவரை மீண்டும் வாங்க கைகளை உயர்த்தியது. அவர்களுக்கு போட்டியளிக்கும் வகையில் பஞ்சாப் அணியும் ஏலத்தில் குதித்தது.
தொடர்ந்து ரூ.6 கோடிக்கு மேல் சென்ற போது கேகேஆர் அணி விலகி கொள்ள, பின்னர் டெல்லி அணி ஏலத்தில் குதித்தது. இருவரும் ஸ்ரேயாஸ் ஐயருக்காக ரூ.15 கோடிக்கும் அதிக தொகையுடன் வாங்க போராடினர். தொடர்ந்து ரூ.17.50 கோடிக்கு ஸ்ரேயாஸ் ஐயரின் விலை எகிற, டெல்லி அணி அவருக்கு ரூ.18 கோடி கொடுக்க முன் வந்தது.
ஆனால் பஞ்சாப் அணி ஸ்ரேயாஸ் ஐயரின் விலையை மீண்டும் அதிகரிக்க, அவரின் மதிப்பு ரூ.22 கோடிக்கும் அதிகமாக சென்றது. இதனையடுத்து ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக தொகை கொடுத்து வாங்கப்பட்ட மிட்சல் ஸ்டார்க்கின் ரூ.24.75 கோடி என்ற சாதனையை ஸ்ரேயாஸ் ஐயர் முறியடித்தார். அவரின் மதிப்பு ரூ.26 கோடி கொடுக்க டெல்லி அணி முன் வந்தது.
இறுதியாக பஞ்சாப் அணி ரூ.26.75 கோடி கொடுத்து பஞ்சாப் அணி ஸ்ரேயாஸ் ஐயரை கைப்பற்றியது. பஞ்சாப் அணி ரிஷப் பண்ட்-ஐ வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் பிடிவாதமாக வாங்கியுள்ளது. இதன் மூலமாக ரிக்கி பாண்டிங் - ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் மீண்டும் இணைந்து பணியாற்றவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications