நடராஜனை கைவிட்ட சன்ரைசர்ஸ்.. கைகொடுத்த டெல்லி கேபிடல்ஸ்.. ஸ்டார்க் உடன் இணைந்தார்
ஜெட்டா: 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் தமிழகத்தை சேர்ந்த வேகப் பந்துவீச்சாளர் நடராஜனை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த அணி அவரை கைவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி நடராஜனை 10.75 கோடிக்கு வாங்கியது.
யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் ஆன நடராஜன் 2017 ஆம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பெற்று இருந்தார். அதன் பின் 2020இல் அவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது. அப்போது முதல் சன்ரைசர்ஸ் அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளராக இருந்தார் நடராஜன். 2024 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக 19 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார்.

இதுவே 2024 தொடரில் அந்த அணியில் ஒரு பந்துவீச்சாளர் வீழ்த்திய அதிக விக்கெட்களாக இருந்தது. ஆனாலும், சன்ரைசர்ஸ் அணி அதிரடி பேட்ஸ்மேன்களான கிளாசன், அபிஷேக் சர்மா, ட்ராவிஸ் ஹெட் மற்றும் கேப்டனாக பாட் கம்மின்ஸ்-ஐ தக்க வைக்க முடிவு செய்து நடராஜனை அணியில் இருந்து விடுவித்தது.
அதன் பின் நடராஜன் ஏலத்தில் பங்கேற்றார். அவருக்கு கடும் போட்டி இருந்தது. முதல் 4 கோடி வரை சன்ரைசர்ஸ் அணி அவரை ஏலத்தில் கேட்டது. அதன் பின் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் நடராஜனை வாங்க முட்டி மோதின. இறுதியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி அவரை 10.75 கோடிக்கு வாங்கியது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் மிட்செல் ஸ்டார்க் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து மிட்செல் ஸ்டார்க் மற்றும் நடராஜன் இணைந்து பந்து வீச உள்ளது உறுதியாகி உள்ளது. நடராஜன் சிறந்த யார்க்கர் பந்துவீச்சாளராக இருக்கிறார். மேலும், கடைசி ஓவர்களிலும் கட்டுக் கோப்பாக வீசும் ஆற்றல் உடையவராக இருக்கிறார்.
எனவே, அவரை டெல்லி கேப்பிடல்ஸ் அணி வாங்கியது அந்த அணிக்கு திருப்புமுனையாக மாறக் கூடும். நடராஜனை சிஎஸ்கே அணி வாங்கும் என்ற எதிர்பார்ப்பும் சிலருக்கு இருந்தது. ஆனால், சிஎஸ்கே அணி அவரை வாங்க முயற்சிக்கவில்லை. அது சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.


Click it and Unblock the Notifications