"நடராஜனின் இழப்பை ஈடுகட்டவே முடியாது.. அவரை வாங்காமல் போக காரணமே இதுதான்" - சன்ரைசர்ஸ் கோச் வெட்டோரி
மும்பை: கடந்த ஆண்டு வரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்று இருந்த தமிழக வேகப் பந்துவீச்சாளர் நடராஜன் 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் வாங்கப்பட்டார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவரை வாங்காதது அந்த அணியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நடராஜனை வாங்க முடியாதது குறித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி வருத்தம் தெரிவித்தார். நடராஜனின் இழப்பை எதனாலும் ஈடு கட்ட முடியாது என்றும், அவரை வாங்க முடியாமல் போக என்ன காரணம் என்றும் அவர் விளக்கம் அளித்து இருக்கிறார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடந்த ஏழு ஆண்டுகளாக பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டதற்கு புவனேஸ்வர் குமார் மற்றும் நடராஜன் முக்கிய காரணமாக இருந்தனர். நடராஜன் அவரது யார்க்கர் பந்து வீச்சுக்காக ஐபிஎல் வட்டாரத்தில் புகழ் பெற்று விளங்கி வருகிறார். கடைசி ஓவர்களில் கட்டுக்கோப்பாக பந்து வீசும் ஆற்றல் உடையவர் என்பதால் அனைத்து கிரிக்கெட் விமர்சகர்களும் அவரை பாராட்டி வந்தனர்.
எனினும், 2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன் அவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விடுவித்தது. பேட்டிங்கில் வலுவான அணியை உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அந்த அணி, டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசன் மற்றும் கேப்டனாக பாட் கம்மின்ஸ் ஆகிய வீரர்களை தக்க வைத்தது.
நடராஜன் பெயர் ஏலத்தில் இடம் பெறும் முன்பே முகமது ஷமியை 10 கோடிக்கும், ஆல் - ரவுண்டரான ஹர்ஷல் பட்டேலை 8 கோடிக்கும் வாங்கியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. அதனால் நடராஜனை ஏலத்தில் அதிக விலை கொடுத்து வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி நடராஜனை 10.75 கோடி கொடுத்து வாங்கியது. நடராஜனை வாங்க முடியாதது பற்றி பேசிய டேனியல் விக்டோரி, "நடராஜனின் இழப்பை எதனாலும் ஈடுகட்ட முடியாது. ஒவ்வொரு அணியும் இதுபோன்ற கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஏலத்தின் முதல் பகுதியிலேயே சில வீரர்களை நாம் வாங்க வேண்டி உள்ளது. அல்லது வாய்ப்புக்காக கடைசி வரை காத்திருந்து ஒரு வீரரை வாங்கலாம். இதில் ஏதோ ஒன்றை தான் நாம் செய்ய முடியும்." என்றார்.
"நாங்கள் ஏலத்தின் முதல் பகுதியில் முகமது ஷமி, ஹர்ஷல் பட்டேல் ஆகியோரது பெயர்கள் வந்தபோது அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தோம். அவர்களுக்கான விலை குறைவாக இருந்ததாகவே நாங்கள் கருதினோம். அதனால், அவர்களை வாங்கினோம்." என்றார் வெட்டோரி. இதன் மூலம் முகமது ஷமி மற்றும் ஹர்ஷல் பட்டேலை வாங்கியதால் தான் நடராஜனை வாங்க முடியவில்லை என அவர் கூறி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications