IPL Auction: ஐபிஎல் ஏலம் துவங்கும் நேரம் மாற்றம்.. கடைசி நிமிடத்தில் ஹாட்ஸ்டார் பேச்சை கேட்ட பிசிசிஐ
மும்பை: 2025 ஐபிஎல் மெகா ஏலம் துவங்கும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது. நவம்பர் 24 மற்றும் 25 தேதிகளில் 2025 ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடைபெற உள்ளது. இந்த ஏலம் இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது ஐபிஎல் ஏலம் துவங்கும் நேரத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ஐபிஎல் மெகா ஏலம் மதியம் 3.30 மணி அளவில் துவங்கும். இந்த நேர மாற்றத்துக்கு முக்கிய காரணம் இந்தியா - ஆஸ்திரேலியா ஆடி வரும் டெஸ்ட் தொடர் தான்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் முதல் போட்டியில் விளையாடி வருகின்றன. நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் மற்றும் நான்காவது நாள் ஆட்டம் நடைபெறும். இந்திய நேரப்படி இந்த டெஸ்ட் போட்டியின் ஆட்ட நேரம் மதியம் 2:50 மணிக்கு முடிவுக்கு வரும்.
சில சமயம் அம்பயர் மற்றும் கேப்டன்கள் ஒப்புக் கொண்டால் கூடுதல் நேரம் பந்து வீசப்படும். அப்படி நடந்தால் அந்த நாளின் ஆட்டம் முடியும் 3 மணிக்கு மேல் ஆகலாம். அப்படி நடந்தால் ஐபிஎல் ஏலம் துவங்கும் போது இந்த டெஸ்ட் போட்டியை ஒளிபரப்ப முடியாத சூழ்நிலை ஏற்படும்.
இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியையும், ஐபிஎல் ஏலத்தையும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பும் உரிமம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி வசம் உள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியின் கடைசி சில ஓவர்களை ஒளிபரப்ப முடியாமல் போனால் அது ஒளிபரப்பு ஒப்பந்தத்திலும் சிக்கலை ஏற்படுத்தும். எனவே, ஹாட்ஸ்டார் பிசிசிஐ-க்கு ஐபிஎல் ஏலம் துவங்கும் நேரத்தை மாற்ற வேண்டும் என அழுத்தம் கொடுத்து இருந்தது.
ஐபிஎல் ஏலத்தின் ஸ்ட்ரீமிங் உரிமை மட்டுமே ஜியோ சினிமா வசம் உள்ளது. தற்போது ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஒன்றாக இணைந்து விட்ட நிலையில், இந்த நேர மாற்றத்தை இரண்டு ஒளிபரப்பு நிறுவனங்களும் வலியுறுத்தி இருக்கின்றன. இதை அடுத்து பிசிசிஐ நேரத்தை மாற்ற ஒப்புக் கொண்டிருக்கிறது. எனவே, நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ஐபிஎல் மெகா ஏலம் மதியம் 3.30 மணிக்கு துவங்கி நடைபெறும்.


Click it and Unblock the Notifications