13 வயது வீரர் இவ்ளோ பெரிய சிக்ஸ் அடிக்கிறாரா? வைபவ் சூர்யவன்ஷி குறித்து பாகிஸ்தான் வீரர் சர்ச்சை
மும்பை: இந்திய அண்டர் 19 அணியில் இடம் பெற்று இருந்த 13 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி குறித்து சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசி ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார் முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஜுனைத் கான். 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருந்தார் வைபவ் சூர்யவன்ஷி.
அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 1.10 கோடி ரூபாய்க்கு வாங்கி இருந்தது. 13 வயது ஆன வைபவ் சூர்யவன்ஷி பீகார் மாநிலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஆவார். இளம் வயதிலேயே அவர் அதிரடியாக பேட்டிங் ஆடுவதால் அவர் இப்போதே இந்திய அண்டர் 19 அணியில் இடம் பிடித்து விட்டார். வருங்காலத்தில் அவர் சிறந்த இந்திய கிரிக்கெட் வீரராக வர வாய்ப்பு உள்ளதாக முன்னாள் வீரர்கள் பலரும் அவர் மீது ஒரு கண் வைத்துள்ளனர்.

இந்த நிலையில், 2024 அண்டர் 19 ஆசிய கோப்பை தொடரின் அரை இறுதியில் அவர் ஆடிய ஆட்டம் கவனத்தை ஈர்த்தது. அந்தப் போட்டியில் அவர் 36 பந்துகளில் 67 ரன்கள் அடித்திருந்தார். இலங்கை அணிக்கு எதிரான அந்த அரை இறுதிப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் அதற்கு முக்கிய காரணமாக இருந்தார் வைபவ் சூர்யவன்ஷி.
அந்தப் போட்டியில் அவர் ஆறு ஃபோர் மற்றும் ஐந்து சிக்ஸ் அடித்து இருந்தார். அவர் அடித்த ஒரு சிக்ஸ் சுமார் 100 மீட்டர் தூரம் சென்றது. அந்த வீடியோவை வைத்து ஜுனைத் கான் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். அதில், "13 வயது சிறுவன் இத்தனை பெரிய சிக்ஸரை அடிக்க முடியுமா?" என கேட்டு சந்தேகத்தை கிளப்பி இருக்கிறார்.
வைபவ் சூர்யவன்ஷியின் உண்மையான வயது 15 என சமூக வலை தளங்களில் பரவி வரும் கருத்தை முன்வைத்து ஜுனைத் கான் இவ்வாறு சர்ச்சையை கிளப்பி இருப்பதாக தெரிகிறது. ஐபிஎல் ஏலத்தின் போதே இந்த சர்ச்சை எழுந்தது. அப்போது வைபவ் சூர்யவன்ஷியின் தந்தை சஞ்சீவ் இது பற்றி விளக்கம் அளித்து இருந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்பே வைபவ் சூர்யவன்ஷிக்கு சரியான வயதை அறியும் எலும்பு மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், மீண்டும் அது போன்ற பரிசோதனையை வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளலாம் என்றும் அவர் கூறி இருந்தார்.


Click it and Unblock the Notifications