IPL Auction - ஐபிஎல் மெகா ஏலம் எப்போது? எங்கு நடைபெறுகிறது.. வெளியான புதிய தகவல்கள்
மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டிற்கான மெகா ஏலம் வரும் நவம்பர் மாதம் 24 மற்றும் 25 ஆம் தேதி சவுதி அரேபியாவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணிகளும் பல்வேறு வீரர்களை வாங்கி தங்களது அணியை கட்டமைக்கும்.
கடந்த ஐபிஎல் மெகா ஏலம் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில் தற்போது மீண்டும் நடக்க இருக்கிறது. இதில் தோனி பங்கேற்பாரா இல்லையா என்பது குறித்து இன்னும் அறிவிப்பை வெளியிடவில்லை என்று சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் மெகா ஏலத்தை சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் அல்லது ஜெட்டா நகரில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதற்காக பிசிசிஐ குழு தற்போது சவுதி அரேபியாவுக்கு சென்று எந்த இடத்தில் நடத்துவது, சாத்தியக்கூறுகள் என்ன என்பது குறித்து ஆராய்ந்து வருகிறது. இதே போன்று லண்டன், சிங்கப்பூர், துபாய் போன்ற இடங்களிலும் மெகா ஏலத்தை நடத்தலாமா என்று பிசிசிஐ ஆலோசனை நடத்தியது.
ஆனால் சவுதி அரேபியாவில் நடத்த 99 சதவீதம் முடிவாகி இருக்கிறது. எனினும் நவம்பர் 24 மற்றும் 25ஆம் தேதி மெகா ஏலம் நடத்துவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. ஆஸ்திரேலிய இந்தியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த போட்டி டிஸ்னி ஹாட் ஸ்டாரில் தான் ஒளிபரப்பு செய்யப்படும்.
அதே வேலையில் ஐபிஎல் மெகா ஏலத்தை நடத்தினால் ஆஸ்திரேலிய போட்டிகளை யாரும் பார்க்க மாட்டார்கள். இதனால் தேதியை மாற்ற டிஸ்னி நிறுவனம் கோரிக்கை விடுக்குமா என்ற சந்தேகமும் இருக்கிறது. ஆனால் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டி அதிகாலை 5 மணிக்கு தொடங்கி மதியம் 12 அல்லது ஒரு மணிக்கு முடிந்துவிடும்.
இதனால் ஐபிஎல் மெகா ஏலத்தை மதியம் தொடங்கி இரவு வரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ஐபிஎல் மெகா இடத்திற்கு முன்பு எந்தெந்த அணி எந்தெந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்கிறோம் என்பதை வரும் அக்டோபர் 31ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அன்று தீபாவளி என்பதால் ஐபிஎல் வீரர்களை தக்க வைக்கும் அறிவிப்பை மறுநாள் வெளியிட வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications