மும்பை: ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வளர்த்த சிங்கக்குட்டி ஒன்றை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மெகா ஏலத்தில் தட்டி தூக்கியிருக்கிறது. சிஎஸ்கே அணியில் தற்போது பெயர் சொல்லும் படி கலீல் அகமது மட்டும்தான் இந்திய வேகப் பந்துவீச்சாளராக இருக்கிறார்.
தீபக் சாஹரை சிஎஸ்கே அணி எடுக்க முயற்சி செய்தபோது அவர் மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டார். இந்த நிலையில் சிஎஸ்கே அணி உள்ளூர் வேக பந்துவீச்சாளர்களை வாங்க முயற்சி செய்து வந்தது.

இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய 23 வயது வேகப்பந்துவீச்சாளர் அன்சூல் கம்போஜை சிஎஸ்கே அணி தற்போது மூன்று கோடியே 40 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது. 30 லட்சம் அடிப்படை விலையாக இருந்த அன்சூல் கம்போஜை சிஎஸ்கேவும் மும்பை இந்தியன்ஸ் அணியும் போட்டி போட்டுக் கொண்டு வாங்க முயற்சி செய்தார்கள்.
இவரின் விலை 10 மடங்கு அதிகரித்தும் சிஎஸ்கே விடாமல் போட்டி போட்டது. கடைசியாக சிஎஸ்கே அணி மூன்று கோடியே 40 லட்சம் ரூபாய் கொடுத்து கம்போஜை வாங்கியது. சிஎஸ்கே இவ்வளவு விலை கொடுத்து இருக்கிறது என்றால் அவர் என்ன சாதாரணமான வீரராக இருந்திருப்பாரா. சமீபத்தில் இந்த பெயரை நீங்கள் கேள்விப்பட்டு இருக்கலாம்.
ஏனென்றால் ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் கேரள அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹரியானாவை சேர்ந்த அன்சூர் கம்போஜ் சாதனை படைத்தார். இதன் மூலம் ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில் அனைத்து 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது.
வேகமாகவும் துல்லியமாகவும் பந்து பேசக்கூடிய அன்சூர் கம்போஜை மும்பை அணி கடந்த சீசனில் தேர்வு செய்து வளர்த்தது. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி காம்போஜை இம்முறை பயன்படுத்தலாம் என நினைப்பில் இருந்தபோது,தற்போது ஏலத்தில் சிஎஸ்கே அணி அபாரமாக செயல்பட்டு அவரை தட்டி தூக்கி இருக்கிறது.