மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் தற்போது நடந்து முடிவடைந்து இருக்கிறது. இந்த ஏலத்தில் 557 வீரர்கள் பங்கேற்று இருந்தார்கள். இந்த ஏலத்தில் மிகவும் வயதான வீரராக இங்கிலாந்து சேர்ந்த கிரிக்கெட் ஜாம்பவான் ஆண்டர்சன் அறியப்பட்டார்.
42 வயதான ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஜாம்பவானாக விளங்கி இருக்கிறார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 704 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையும் அவர் பெற்றிருக்கிறார்.

இந்த நிலையில் ஆண்டர்சன் ஐபிஎல் தொடரில் இதுவரை ஒரு சீசனில் கூட பங்கேற்றது கிடையாது. தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், ஆண்டர்சன் ஒரு முறையாவது ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்பதற்காக தன்னுடைய பெயரை ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் ஆண்டர்சனின் பெயர் ஏல மேடைக்கு வராமல் போனது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. டேவிட் வார்னர் போல் ஏலம் கேட்கப்பட்டு யாரும் வாங்க முன்வரவில்லை என்றால் பரவாயில்லை. ஆனால் அவருடைய பெயர் ஏன் ஏலம் மேடைக்கு ஏறவில்லை என்று பலரிடமும் சந்தேகம் இருக்கிறது.
அதாவது ஏலத்தின் இரண்டாவது நாளை விரைவாக நடத்த வேண்டும் என்பதற்காக பட்டியலில் இருந்த 117 இருந்து 557 வரை உள்ள வீரர்களில் வெறும் 143 வீரர்கள் மட்டும்தான் அணிகள் பரிந்துரைப்படி ஏலம் கேட்கப்பட்டது. இந்த 143 வீரர்கள் பட்டியலில் ஆண்டர்சன் பெயரை எந்த ஒரு அணியும் எழுதவில்லை. இதற்கு காரணம் ஆண்டர்சன் கடைசியாக டி20 கிரிக்கெட் விளையாடி பத்தாண்டுகள் மேல் ஆகிறதாம்.
ஆண்டர்சன் இதுவரை 44 டி20 போட்டிகளில் விளையாடி 41 விக்கெட்டுகள் தான் வீழ்த்திருக்கிறார். 42 வயதாகி இருக்கும் ஆண்டர்சன், டி20 கிரிக்கெட் எப்படி விளையாடுவார் என்று தற்போது தெரியவில்லை. இதனால் அவருக்கு அடிப்படை விலையாக ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் தருவது என்பது சரியாக இருக்காது என முடிவெடுத்த ஐபிஎல் அணிகள், அவருடைய பெயரையே ஏல மேடைக்கு ஏற்ற வில்லை.
அது மட்டுமில்லாமல் ஆண்டர்சன் கிரிக்கெட்டின் உச்சியில் இருந்த காலகட்டத்தில் பல அணிகள் அழைத்தும் அவர் இங்கிலாந்து தான் முக்கியம் என்று சென்றுவிட்டார். நாங்கள் கேட்கும் போது வரவில்லையே என்ற கோபத்தாலும் கூட ஆண்டர்சனை அணிகள் எடுக்காமல் இருந்திருக்கலாம். மொத்தத்தில் இது ஆண்டர்சன் கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள கரும்புள்ளியாக பார்க்கப்படுகிறது.