IPL 2026 ஏலம்.. பெரியவனே 43 கோடி வச்சிட்டு என்ன செய்ய போற? முன்னாள் நம்பர் 1 வீரரை கோட்டை விட்ட CSK
அபுதாபி: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் கைவசம் 43 கோடியே 40 லட்சம் ரூபாய் இருந்தது. இதனால் சிஎஸ்கே அணி பல வீரர்களை குறி வைத்து எந்த தயக்கமும் இன்றி வாங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் வழக்கம்போல் ஏமாற்றமே மிஞ்சியது.
ஆஸ்திரேலிய வீரர் கேமரன் கிரீனுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உடன் போட்டி போட்டு சிஎஸ்கே அணி ஏலம் கேட்டது. ஒரு கட்டத்தில் 25 கோடியே 20 லட்சம் ரூபாய் சென்ற பிறகு, சிஎஸ்கே அணி பின்வாங்கியது.

இதே போன்று சிஎஸ்கே அணி லியான் லிவிங்ஸ்டோனை வாங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருடைய பெயர் வந்ததும் சிஎஸ்கே அணி அமைதி காத்தது. இதனால் அவர் முதல் சுற்றில் விலை போகவில்லை. அஸ்வின் ஜடேஜா ஆகியோர் தற்போது இல்லாத நிலையில் சிஎஸ்கே அணிக்கு சுழற் பந்துவீச்சு படை தேவைப்படும்.
இந்த தருணத்தில் ராகுல் சாகரின் பெயர் வந்தது. அப்போதும் சிஎஸ்கே அணி அவரை விலை கேட்கவில்லை. இந்த தருணத்தில் ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ரவி பிஷ்ணாயை சிஎஸ்கே அணி எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அவருடைய அடிப்படை விலை இரண்டு கோடி ரூபாயாக இருந்தது.
முதலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை அடிப்படை விலைக்கு கேட்க சிஎஸ்கே அணியும் போட்டி போட்டது. இதனால் அவருடைய விலை கிடு கிடுவென உயர்ந்து 5 கோடியை தாண்டியது. சிஎஸ்கே அணி 5 கோடியே 80 லட்சம் வரை கேட்ட நிலையில், திடீரென்று அவரை வாங்காமல் பின்வாங்கியது. இதை அடுத்து சன்ரைசர்ஸ் அணி உள்ளே புகுந்து அவருக்கு போட்டி போட்டதால் அவருடைய விலை 7 கோடியே 20 லட்சம் ரூபாய் வரை உயர்ந்தது.
இறுதியில் ராஜஸ்தான் அணி அவரை வாங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 43 கோடியே 40 லட்சம் ரூபாய் கைவசம் இருந்த நிலையில் ரவி பிஷ்னாயை நினைத்து இருந்தால் வாங்கி இருக்கலாம். ஆனால் அவருக்கு 5 கோடியே 80 லட்சம் ரூபாய் வரை மட்டுமே சிஎஸ்கே அணி ஏலத்தில் கேட்டது.


Click it and Unblock the Notifications