அபுதாபி: ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி நிர்வாகம் செய்த செயல், கிரிக்கெட் உலகையே புருவம் உயர்த்த வைத்துள்ளது. சர்வதேச போட்டிகளில் விளையாடாத இரண்டு உள்ளூர் வீரர்களுக்காக, சிஎஸ்கே அணி மொத்தம் 28.40 கோடி ரூபாயை வாரி இறைத்துள்ளது. பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் சர்மா ஆகிய அந்த இரண்டு இளம் வீரர்களும், ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு வாங்கப்பட்ட அன்கேப்ட் வீரர்கள் என்ற சரித்திர சாதனையைப் படைத்துள்ளனர்.
பொதுவாக நட்சத்திர வீரர்களுக்குத்தான் கோடிகள் கொட்டப்படும். ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இம்முறை அதிகம் தெரியாத உள்ளூர் வீரர்களை தேடிப்பிடித்து, அவர்கள் மீது பணமழை பொழிந்துள்ளது.

இதற்கு முன்பு, 2022-ம் ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஆவேஷ் கானை ரூ.10 கோடிக்கு வாங்கியதே அன்கேப்ட் வீரருக்கான அதிகபட்ச தொகையாக இருந்தது. ஆனால், பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் சர்மா ஆகிய இருவருமே தலா ரூ.14.20 கோடிக்கு ஏலம் போய், அந்தச் சாதனையை 40 சதவீதம் அதிக வித்தியாசத்தில் முறியடித்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தின் அமேதி பகுதியைச் சேர்ந்த 20 வயதான பிரசாந்த் வீர், ஒரு இடதுகை சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஆவார். ரவீந்திர ஜடேஜா சிஎஸ்கே அணியில் இல்லாத குறையைத் தீர்க்கவே சிஎஸ்கே இவரைத் தேர்வு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஜடேஜாவைப் போலவே இவரும் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் கலக்கக்கூடியவர்.
பிரசாந்த் வீர் சையத் முஷ்டாக் அலி தொடரில் 169.69 ஸ்ட்ரைக் ரேட்டில் 112 ரன்கள் மற்றும் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். உத்தரப் பிரதேச டி20 லீக்கில் நொய்டா அணிக்காக 10 போட்டிகளில் 320 ரன்கள் மற்றும் 8 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
இவரை வாங்க ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் சிஎஸ்கேவுடன் கடும் போட்டி போட்டன. விலை 10 கோடியைத் தாண்டிய போதும் சிஎஸ்கே பின்வாங்காமல் 14.20 கோடிக்கு இவரைத் தட்டித் தூக்கியது.
ராஜஸ்தானைச் சேர்ந்த 19 வயதான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தான் கார்த்திக் சர்மா. இவர் இதுவரை விளையாடிய 12 டி20 போட்டிகளில் 334 ரன்கள் குவித்துள்ளார். இதில் சிறப்பு என்னவென்றால், அவர் அடித்த 28 சிக்ஸர்கள் தான். இவரது ஸ்ட்ரைக் ரேட் 164.
இவரது அதிரடி பேட்டிங் வீடியோக்களைப் பார்த்து கெவின் பீட்டர்சன் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் ஏற்கனவே பாராட்டியுள்ளனர். இவரை வாங்க கேகேஆர், எஸ்ஆர்ஹெச், எல்எஸ்ஜி என நான்கு அணிகள் மோதின. இறுதியில் சிஎஸ்கே 14.20 கோடிக்கு இவரைச் சொந்தமாக்கியது.
பிரசாந்த் வீர் (இந்தியா) - ₹14.20 கோடி (2026 - CSK)
கார்த்திக் சர்மா (இந்தியா) - ₹14.20 கோடி (2026 - CSK)
ஆவேஷ் கான் (இந்தியா) - ₹10 கோடி (2022)
கிருஷ்ணப்பா கௌதம் (இந்தியா) - ₹9.25 கோடி (2021)
ஆகிப் நபி (இந்தியா) - ₹8.40 கோடி (2026 - DC)
ரிலே மெரிடித் (ஆஸ்திரேலியா) - ₹8 கோடி (2021)