சென்னை: 2026 ஐபிஎல் மினி ஏலம் வரும் டிசம்பர் 16-ம் தேதி அபுதாபியில் நடைபெறவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) நிர்வாகம் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ, ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும், அதேசமயம் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
காய்கறி மார்க்கெட்டில் நடப்பது போன்ற அந்த வீடியோவில், சிஎஸ்கே யாரை ஏலத்தில் எடுக்கப்போகிறது என்பதற்கான ரகசியக் குறியீடுகள் இருப்பதாக ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். அந்த வீடியோவில் மூன்று பொருட்கள் காட்டப்படுகின்றன. அவை மூன்று வீரர்களை குறிப்பதாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

கடந்த சீசனில் கடைசி இடத்தைப் பிடித்த சிஎஸ்கே, இம்முறை ரூ.43.40 கோடி கையிருப்புடன் 9 வீரர்களைத் தேர்வு செய்யக் காத்திருக்கிறது. இந்த நிலையில், சிஎஸ்கே வெளியிட்டுள்ள அந்த 1 நிமிடம் 37 வினாடிகள் கொண்ட வீடியோவில், அந்த அணியின் மாஸ்காட் ஆன 'லியோ' சிங்கம் ஒரு காய்கறி சந்தைக்குச் செல்கிறது. அங்கு பல கடைகளைப் பார்வையிட்ட பிறகு, லியோ மூன்று பொருட்களை வாங்கி ஒரு பையில் போடுகிறது.
அந்த மூன்று பொருட்கள்: கிவி பழம் (Kiwi), ஆப்பிள் மற்றும் மிக்சர் பொட்டலம். இந்த மூன்று பொருட்களும் ஏதோ மூன்று வீரர்களைக் குறிப்பதாக ரசிகர்கள் துப்பு துலக்கி வருகின்றனர்.
இது நியூசிலாந்து நாட்டை பூர்வீகமாக கொண்ட பழம் என்பதால் இது நியூசிலாந்து வீரரை குறிக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது. எனவே, சிஎஸ்கே ஒரு நியூசிலாந்து வீரரை நிச்சயம் வாங்கும். அது அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட டெவோன் கான்வே அல்லது ரச்சின் ரவீந்திராவாக இருக்கலாம். அல்லது கேன் வில்லியம்சன் போன்ற புதிய வீரராகவும் இருக்கலாம்.
ஆப்பிள் என்றாலே காஷ்மீர் தான் நினைவுக்கு வரும். எனவே, ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஒரு வீரரை சிஎஸ்கே குறிவைப்பதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் துலீப் டிராபியில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த காஷ்மீர் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி தான் அந்த 'ஆப்பிள்' என்று ரசிகர்கள் அடித்துச் சொல்கிறார்கள்.
"மெட்ராஸ் மிக்சர்" என்பது மிகவும் பிரபலம். இது தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட ஒருவரைக் குறிக்கலாம். மத்திய பிரதேசத்திற்காக விளையாடினாலும், தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட ஆல்-ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரை இது குறிப்பதாகப் பலரும் நம்புகின்றனர். அல்லது பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டும் கலந்த ஒரு 'ஆல்-ரவுண்டர்' தேவை என்பதையும் இது குறிக்கலாம்.
இந்த வீடியோவில் ஆஸ்திரேலியா தொடர்பான எந்தக் குறியீடும் இல்லாததால், அதிக விலைக்குப் போவார் என்று எதிர்பார்க்கப்படும் கேமரூன் கிரீனை வாங்கும் போட்டியில் சிஎஸ்கே இருக்காது என்று ஒரு தரப்பு ரசிகர்கள் கணிக்கின்றனர். அதேசமயம், விடுவிக்கப்பட்ட மதீஷா பதிரானாவை மீண்டும் வாங்குவதற்கான குறிப்புகளும் வீடியோவில் இருப்பதாகச் சிலர் கூறுகின்றனர்.
தோனி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் கூட்டணி என்ன பிளான் வைத்திருக்கிறார்கள் என்பது டிசம்பர் 16-ம் தேதி தெரிந்துவிடும். ஆனால் அதற்கு முன்னதாகவே இந்த "காய்கறி மார்க்கெட்" வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.