Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: 5 ஐபிஎல் அணிகள் துரத்தி அடிச்சாங்க.. ஷூ வாங்க காசு இல்ல.. ரூ.8.4 கோடி வென்ற ஆகிப் நபி

அபுதாபி: கிரிக்கெட் வாழ்க்கையில் எத்தனை முறை கீழே விழுகிறோம் என்பது முக்கியமல்ல, ஒவ்வொரு முறை விழுந்த பிறகும் எப்படி எழுந்து நிற்கிறோம் என்பதுதான் முக்கியம். அதற்கு சிறந்த உதாரணமாக மாறியிருக்கிறார் காஷ்மீரைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி தார்.

நேற்று வரை இவரைப் பற்றி யாருக்கும் தெரியாது. ஆனால் இன்று இந்திய கிரிக்கெட் உலகமே இவரைத் திரும்பிப் பார்க்கிறது. 2026 ஐபிஎல் ஏலத்தில் அடிப்படை விலையான 30 லட்சத்திலிருந்து ஆரம்பித்து, ரூ.8.40 கோடிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார் இந்த "காஷ்மீர் எக்ஸ்பிரஸ்".

IPL Auction 2026 How Auqib Nabi Dar rejected by five IPL teams before bought by Delhi Capitals

சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான் மிட்செல் ஸ்டார்க் உடன் இணைந்து டெல்லி அணிக்காக புது பந்தை வீசப்போகிறார் ஆகிப் நபி. ஆனால், இந்த இடத்திற்கு வர அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் என மொத்தம் 5 ஐபிஎல் அணிகளின் சோதனைகளில் கலந்து கொண்டு நிராகரிக்கப்பட்டவர் இவர் என்பது பலருக்கும் தெரியாது.

ஆகிப் நபியின் கிரிக்கெட் பயணம் பாரமுல்லாவில் உள்ள தெருக்களில் டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில் தான் தொடங்கியது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு என்று பிரத்யேகமான 'ஸ்பைக்ஸ்' காலணிகள் தேவை என்பது கூட அவருக்கு ஆரம்பத்தில் தெரியாது.

"முதல் முறையாக ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் தேர்வுக்கு சென்றபோது என்னிடம் வெறும் 500 ரூபாய் மதிப்பிலான சாதாரண ஸ்போர்ட்ஸ் ஷூ தான் இருந்தது. ஃபாஸ்ட் பவுலர்கள் ஸ்பைக்ஸ் போட்டு தான் பந்து வீச வேண்டும் என்று அங்கிருந்தவர்கள் சொன்னபோது அதிர்ச்சியடைந்தேன். வேறு வழியில்லாமல், அங்கிருந்த ஒரு சீனியர் வீரரிடம் காலணியை இரவல் வாங்கித் தான் பந்து வீசினேன்" என்று பழைய நினைவுகளைக் பகிர்கிறார் ஆகிப். அந்தத் தேர்வில் அவர் நிராகரிக்கப்பட்டார் என்பது தனிக்கதை.

டாக்டராக்க ஆசைப்பட்ட அப்பா

ஆகிப்பின் தந்தை குலாம் நபி தார் ஒரு அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியர். தன் மகன் படித்து ஒரு டாக்டராக வேண்டும் என்பது தான் அவருடைய ஆசை. "ஆரம்பத்தில் நான் கிரிக்கெட் விளையாடுவதை அப்பா வெறுத்தார். படிப்பு தான் முக்கியம் என்று கண்டிப்பார். ஆனால் நான் அண்டர்-19 அணியில் தேர்வான பிறகு, அவரே என் மிகப்பெரிய ரசிகராக மாறிவிட்டார்" என்றார் ஆகிப்.

5 ஐபிஎல் அணிகள் வேண்டாம் என்று சொன்னவரை, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மட்டும் ஏன் ரூ.8.4 கோடி கொடுத்து வாங்கியது? காரணம் அவருடைய சமீபத்திய ஃபார்ம். ரஞ்சி கோப்பை 2024-25 சீசன்களில் 44 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். அதேபோல் 2025-26 சீசனின் முதல் பாதியில் மட்டும் 29 விக்கெட்டுகளை அள்ளி, அதிக விக்கெட் எடுத்த வேகப்பந்து வீச்சாளராக ஜொலித்தார். ராஜஸ்தான் அணிக்கு எதிராக 24 ரன்கள் மட்டுமே கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியது ஸ்கவுட்களின் கவனத்தை ஈர்த்தது.

காஷ்மீரின் டேல் ஸ்டெயின்

இவருடைய பந்துவீச்சு பாணி தென்னாப்பிரிக்க ஜாம்பவான் டேல் ஸ்டெயினைப் போலவே இருப்பதால், இவரை 'காஷ்மீரின் டேல் ஸ்டெயின்' என்று அழைக்கின்றனர். மணிக்கு 140 கி.மீ வேகத்தில் பந்துவீசும் இவர், விக்கெட் கீப்பிங் கிடையாது, பேட்டிங்கிலும் லோயர் ஆர்டரில் அதிரடி காட்டக்கூடியவர். மத்திய பிரதேசத்திற்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை போட்டியில் 21 பந்துகளில் 32 ரன்கள் விளாசி அணியை வெற்றி பெறச் செய்தார்.

"ஐபிஎல் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து பாரமுல்லாவில் ஒரு கிரிக்கெட் அகாடமி ஆரம்பிக்க வேண்டும் என்பது தான் என் கனவு," என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் ஆகிப். இரவல் வாங்கிய ஷூவுடன் தொடங்கிய பயணம், இன்று கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் முக்கிய பந்துவீச்சாளராக அவரை உயர்த்தியுள்ளது.

Story first published: Thursday, December 18, 2025, 18:12 [IST]
Other articles published on Dec 18, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+