அபுதாபி: 2026 ஐபிஎல் மினி ஏலத்தில் யாரும் எதிர்பார்க்காத ஒரு பிரம்மாண்ட சம்பவம் நடந்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் கேமரான் கிரீன் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை முறியடித்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியால் ரூ.25.20 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.
ஆனால், இந்த ஏலத்திற்குப் பின்னால் ஒரு "தில்லுமுல்லு" கதையும் உள்ளது. ஒரு ஆல்-ரவுண்டரான கிரீன், ஏலப்பட்டியலில் 'பேட்ஸ்மேன்' வரிசையில் வந்தது எப்படி? அது ஒரு வகையில் அவருக்கான போட்டியை அதிகரித்தது.

பொதுவாக ஐபிஎல் ஏலத்தில் ஆல்-ரவுண்டர்களுக்கான பெயர் பட்டியல் சற்று தாமதமாகவே வரும். ஆனால், கேமரான் கிரீன் பெயர், ஏலம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பேட்ஸ்மேன்கள் பெயர் இடம்பெறும் முதல் செட்டிலேயே (Set 1 - Batters) வந்தது. காரணம், அவர் தன்னை ஒரு 'பேட்ஸ்மேன்' என்று பதிவு செய்திருந்தார்.
இது குறித்து ஏலத்திற்கு முன்பே விளக்கம் அளித்த கிரீன், "நான் பந்துவீசத் தயாராகவே இருக்கிறேன். ஆனால் ஏலத்திற்குப் பதிவு செய்யும் போது, எனது மேனேஜர் செய்த சிறிய தவறு இது. அவர் 'ஆல்-ரவுண்டர்' என்ற பாக்ஸை டிக் செய்வதற்குப் பதிலாக, தவறுதலாக 'பேட்ஸ்மேன்' என்ற பாக்ஸை டிக் செய்துவிட்டார். இது ஒரு வேடிக்கையான தவறுதான்" என்று சமாளித்து இருந்தார்.
இருப்பினும், அவர் ஒரு முழுமையான ஆல்-ரவுண்டர் என்பது அணிகளுக்குத் தெரிந்த விஷயம் தான். இப்போது கூட ஆஷஸ் தொடரில் அவர் பந்துவீசி வருகிறார். எதிர்பார்த்தது போல இந்தத் தவறு அவருக்குச் சாதகமாகவே அமைந்தது. பேட்ஸ்மேன் வரிசையில் வந்ததால், ஆரம்பத்திலேயே அணிகள் கையில் பணம் இருந்ததால், விலை தாறுமாறாக எகிறியது.
கிரீனின் பெயர் அறிவிக்கப்பட்டதும், அவரது பழைய அணியான மும்பை இந்தியன்ஸ் ரூ.2 கோடிக்கு ஏலத்தைத் தொடங்கியது. உடனே ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டியிட்டது. சிறிது நேரத்தில், கையில் அதிக பணத்தை வைத்திருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) களத்தில் குதித்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.13.60 கோடி வரை சென்று ஒதுங்கிக்கொண்டது. இனி கிரீன் கேகேஆர் வசம்தான் என்று நினைத்த போது, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அதிரடியாக உள்ளே நுழைந்தது.
இங்குதான் உண்மையான ஆட்டம் தொடங்கியது. சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகள் மாறி மாறி விலையை உயர்த்தின. விலை 15 கோடியைத் தாண்டியது. பின்னர் 20 கோடியைத் தாண்டியது. மிட்செல் ஸ்டார்க்கின் 24.75 கோடி சாதனையையும் தாண்டியது. சிஎஸ்கே அணி ரூ.25 கோடி வரை கேட்டது.
ஆனால், கேகேஆர் அணி சற்றும் சளைக்காமல் ரூ.25.20 கோடி கேட்டது. இதற்கு மேல் செல்ல விரும்பாத சிஎஸ்கே பின்வாங்கியது. இறுதியில், ஒரு சிறிய "விண்ணப்பப் பிழை" காரணமாக ஏலத்தில் பேட்ஸ்மேனாகக் களமிறங்கிய கேமரான் கிரீன், பந்துவீசும் திறமையையும் சேர்த்து வைத்து ரூ.25.20 கோடிக்கு கேகேஆர் அணியின் வசமானார். இது ஐபிஎல் வரலாற்றில் ஒரு வெளிநாட்டு வீரருக்குக் கொடுக்கப்பட்ட மிக அதிகபட்ச தொகையாகும்.