சென்னை: 2026 ஐபிஎல் மினி ஏலம் நாளை (டிசம்பர் 16) அபுதாபியில் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், யாரும் எதிர்பார்க்காத சில இளம் வீரர்களை அடையாளம் காட்டியுள்ளார். "இவர்கள் தான் இந்த ஏலத்தின் மறைந்திருக்கும் வைரங்கள் இவர்கள் கோடீஸ்வரர்களாக மாற வாய்ப்புள்ளது" என்று அஸ்வின் கணித்துள்ளார்.
மூத்த பத்திரிகையாளர் விமல் குமாருடன் தனது யூடியூப் சேனலில் பேசிய அஸ்வின், ஏலத்தில் அதிக விலை போக வாய்ப்புள்ள உள்ளூர் (Uncapped) இந்திய வீரர்கள் யார் என்பதைப் பற்றி விவாதித்தார்.

அஸ்வின் கணிப்பின்படி, இரண்டு விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன்களுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என்று தெரிகிறது. கார்த்திக் சர்மா மற்றும் சலில் அரோரா. இதுகுறித்து அஸ்வின் விளக்கமாகப் பேசினார். "யார் அதிக விலைக்குப் போவார்கள் என்று கணிப்பது கடினம். ஆனால், இந்த இரண்டு வீரர்களுக்கும் நடுவே ஒரு சுவாரஸ்யமான போட்டி இருக்கும் என்று நினைக்கிறேன். கார்த்திக் சர்மா மற்றும் சலில் அரோரா ஆகிய இருவருமே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள்.
ஏலத்தில் ஒரு அணி கார்த்திக் சர்மாவை வாங்கத் தவறினால், அவர்கள் எப்படியாவது சலில் அரோராவை வாங்கிவிட வேண்டும் என்று துரத்துவார்கள். அல்லது சலில் அரோரா முதலில் வந்து அவரை ஒரு அணி தவறவிட்டால், அவர்கள் கார்த்திக் சர்மா பின்னால் ஓடுவார்கள். இந்தத் தேவை இவர்களின் விலையை எகிற வைக்கும்" என்று ஏலத்தின் உளவியலை விளக்கினார்.
பஞ்சாப் வீரரான சலில் அரோரா சமீபத்தில் நடந்த சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் பெரிய அதிரடி ஆட்டத்தை ஆடி இருந்தார். வெறும் 45 பந்துகளில் 125 ரன்கள் விளாசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதில் 11 சிக்ஸர்கள் அடங்கும். இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தேவைப்படும் அணிகளுக்கு இவர் முக்கிய வீரராக இருப்பார்.
இவர்கள் இருவரைத் தவிர, தமிழ்நாடு அணிக்காக ஆடி வரும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துஷார் ரஹேஜா மீதும் அணிகளின் பார்வை இருக்கும் என்றும், அவருக்கும் நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீரர்களின் அடிப்படை விலை வெறும் ரூ.30 லட்சம் மட்டுமே. ஆனால், அஸ்வின் சொல்வதைப் பார்த்தால், ஏலம் முடியும் போது இவர்கள் கையில் சில கோடிகள் இருக்கும் என்றே தெரிகிறது. 2026 ஐபிஎல் ஏலத்தில் அஸ்வின் கணிப்பு பலிக்குமா?