IPL Auction: ஆர்சிபி செய்த சம்பவம்.. 23.75 கோடி வீரரை குறைந்த தொகைக்கு வாங்கியது.. வெங்கடேஷ் டூ RCB
அபுதாபி: ஐபிஎல் 2026 ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரை ரூ.7 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. அவரைத் தக்கவைக்க அவரது முன்னாள் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) கடுமையாகப் போராடியும், இறுதியில் ஆர்சிபி அவரைத் தட்டிச் சென்றது.
ஏலத்தில் நடந்தது என்ன?
வெங்கடேஷ் ஐயரின் பெயர் ஏலத்திற்கு வந்தவுடன், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் அவரை வாங்க ஆர்வம் காட்டின. விலை மளமளவென உயர்ந்தது. ஆனால், விலை 3 கோடியைத் தாண்டியதும் குஜராத் டைட்டன்ஸ் பின்வாங்கியது.

அதன்பிறகு களத்தில் குதித்தது ஆர்சிபி. வெங்கடேஷ் ஐயரின் முன்னாள் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸும் அவரை மீண்டும் வாங்க போட்டி போட்டது. இரு அணிகளும் மாறி மாறி விலையை உயர்த்தின. கடைசியாக கேகேஆர் ரூ.6.5 கோடி வரை கேட்டது. ஆனால், ஆர்சிபி ரூ.7 கோடி கேட்டதும் கேகேஆர் ஒதுங்கிக்கொண்டது. இதனால் வெங்கடேஷ் ஐயர் பெங்களூரு வசம் ஆனார்.
கேகேஆர் விடுவித்தது ஏன்?
கடந்த 2025 ஐபிஎல் ஏலத்தில் வெங்கடேஷ் ஐயர் ரூ.23.75 கோடிக்கு கேகேஆர் அணியால் வாங்கப்பட்டிருந்தார். ஒரு உள்ளூர் வீரருக்கு இது பெரிய தொகையாகப் பார்க்கப்பட்டது. ஆனால், அந்த சீசனில் அவரால் எதிர்பார்த்த அளவு ரன் குவிக்க முடியவில்லை. கேகேஆர் அணியும் பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் ஏமாற்றமடைந்தது. இந்த மோசமான அனுபவத்தால் அவரை கேகேஆர் விடுவித்தது.
ஏலத்தில் அவர் குறைந்த விலைக்குப் போவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆர்சிபி மற்றும் கேகேஆர் போட்டி போட்டதால் விலை எகிறியது.
லிவிங்ஸ்டோனுக்கு மாற்று
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கடந்த சீசனில் தங்கள் அணியில் இருந்த இங்கிலாந்து அதிரடி ஆல்-ரவுண்டர் லியம் லிவிங்ஸ்டோனை விடுவித்திருந்தது. தற்போது அந்த ஆல்-ரவுண்டர் இடத்தை நிரப்பவே வெங்கடேஷ் ஐயரை ஆர்சிபி தேர்வு செய்துள்ளது. இடது கை பேட்ஸ்மேனான வெங்கடேஷ் ஐயர் ஆர்சிபிக்கு பெரிய பலமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications