மும்பை: 2026 ஐபிஎல் மினி ஏலம் இன்னும் சில நாட்களில் அபுதாபியில் நடைபெறவுள்ள நிலையில், ஏலப் பட்டியலில் பிசிசிஐ திடீரென ஒரு மாற்றத்தைச் செய்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட 9 வீரர்களின் பெயர்களை, இப்போது சத்தமில்லாமல் நீக்கியுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
டிசம்பர் 16-ம் தேதி நடைபெறவுள்ள இந்த ஏலத்திற்காக முதலில் 350 வீரர்கள் கொண்ட இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. பின்னர் டிசம்பர் 9-ம் தேதி, அணிகளின் கோரிக்கையின் பேரில் கூடுதலாக 9 வீரர்கள் சேர்க்கப்பட்டு, பட்டியல் 359-ஆக உயர்ந்தது. ஆனால், சனிக்கிழமை (டிசம்பர் 13) நிலவரப்படி, அந்த 9 வீரர்களின் பெயர்களும் பட்டியலில் இருந்து திடீரென மாயமாகிவிட்டன. நீக்கப்பட்டவர்களில் 6 பேர் இந்திய வீரர்கள் மற்றும் 3 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவர்.

விராட் சிங் (இந்தியா - ஜார்க்கண்ட்): சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய அனுபவம் கொண்டவர்.
ஸ்வஸ்திக் சிகாரா (இந்தியா - உ.பி): கடந்த சீசனில் ஆர்சிபி அணியில் இடம்பிடித்தவர். உள்ளூர் லீக்கில் கலக்கியவர்.
கிறிஸ் கிரீன் (ஆஸ்திரேலியா): உலகம் முழுவதும் டி20 லீக் ஆடும் அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர். அடிப்படை விலை ₹75 லட்சம்.
ஈதன் போஷ் (தென்னாப்பிரிக்கா): வேகப்பந்து வீச்சாளர். அடிப்படை விலை ₹75 லட்சம்.
விரன்தீப் சிங் (மலேசியா): மலேசிய நாட்டைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர்.
மணி சங்கர் முரா சிங் (இந்தியா - திரிபுரா): அனுபவம் வாய்ந்த ஆல்-ரவுண்டர்.
சாமா மிலிந்த் (இந்தியா - ஹைதராபாத்): இடதுகை வேகப்பந்து வீச்சாளர்.
கே.எல். ஸ்ரீஜித் (இந்தியா - கர்நாடகா): விக்கெட் கீப்பர்.
ராகுல் ராஜ் நமலா (இந்தியா - உத்தரகாண்ட்): பேட்ஸ்மேன்.
இந்த 9 வீரர்களைக் கடைசி நேரத்தில் ஏன் சேர்த்தார்கள்? இப்போது ஏன் திடீரென எந்த அறிவிப்பும் இல்லாமல் நீக்கினார்கள்? என்பதற்கான அதிகாரப்பூர்வ விளக்கம் ஐபிஎல் நிர்வாகத்திடம் இருந்து இதுவரை வரவில்லை.
இதனால், வரும் டிசம்பர் 16-ம் தேதி அபுதாபியில் நடக்கவுள்ள ஏலத்தில் மீண்டும் பழையபடியே 350 வீரர்கள் மட்டுமே பங்கேற்பார்கள் என்பது உறுதியாகியுள்ளது. இந்தத் திடீர் நீக்கம் சம்பந்தப்பட்ட வீரர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.