சென்னை: 2026 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி, தனது நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான மதீஷா பதிரானாவை விடுவித்த முடிவு, கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏலத்தில் அவரை மீண்டும் வாங்குவதே சிஎஸ்கே-வின் திட்டம் என கூறப்பட்டாலும் அதற்கும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது.
சிஎஸ்கே-வின் இந்த 'ரிஸ்க்கான' முடிவைப் பயன்படுத்தி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பதிரானாவைக் கைப்பற்ற அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் நடந்த வீரர்கள் பரிமாற்றத்தில், சிஎஸ்கே அணி, ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரணை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குக் கொடுத்து, நட்சத்திர விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனைத் தங்கள் அணிக்கு வெற்றிகரமாகக் கொண்டு வந்தது. இந்த வர்த்தகம் பெரிய அளவில் பேசப்பட்டாலும், பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது, பதிரானாவின் விடுவிப்புதான். கடந்த மெகா ஏலத்திற்கு முன்பு ரூ. 13 கோடிக்குத் தக்கவைக்கப்பட்ட ஒரு முக்கிய வீரரை சிஎஸ்கே விடுவித்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏலத்திற்கு அதிக பணத்துடன் செல்ல வேண்டும் என்பதற்காகவே சிஎஸ்கே இந்த முடிவை எடுத்ததாகவும், ஏலத்தில் பதிரானாவை மீண்டும் குறைந்த விலைக்கு வாங்கிவிடலாம் என்பதே அவர்களின் திட்டம் என்றும் கூறப்படுகிறது. பதிரானாவை சில கோடிகளை குறைத்து வாங்குவதே சிஎஸ்கே-வின் திட்டமாக உள்ளது.
சிஎஸ்கே-வின் நம்பிக்கை நட்சத்திரம் பதிரானா
இலங்கையைச் சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளரான பதிரானாவை, சிஎஸ்கே அணியின் வீரர்கள் திறன் ஆய்வாளர் தான் முதன்முதலில் கண்டறிந்தார். 2020-ஆம் ஆண்டில் அவரை நெட் பவுலராக அணிக்குக் கொண்டுவர சிஎஸ்கே முயன்றது. ஆனால், அது முடியவில்லை. 2022-ஆம் ஆண்டில் காயமடைந்த ஆடம் மில்னேவுக்குப் பதிலாக சிஎஸ்கே அணிக்குள் நுழைந்த பதிரானா, தனது அசாத்திய பந்துவீச்சால் அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை முழுமையாகப் பெற்றார்.
அடுத்த நான்கு சீசன்களில் வெறும் 32 போட்டிகளில் விளையாடி 47 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குறிப்பாக, 2023-ஆம் ஆண்டு சிஎஸ்கே கோப்பையை வென்றதில் அவரது பங்கு மிக முக்கியமானது. பதிரானா அணியின் ஒரு அங்கமாக உயர்ந்ததால், அவரைப் பரிமாற்றம் செய்ய வந்த எந்தவொரு வாய்ப்பையும் சிஎஸ்கே நிர்வாகம் ஏற்கவில்லை.
சஞ்சு சாம்சன் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, சாம் கரணுக்குப் பதிலாகப் பதிரானாவைத் தருமாறு ராஜஸ்தான் அணி ஆரம்பத்தில் கேட்டபோதும், சிஎஸ்கே அதை உறுதியாக நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது. இப்படி ஒரு முக்கியமான வீரரை விடுவித்துவிட்டு, ஏலத்தில் மலிவாக வாங்கலாம் என்ற சிஎஸ்கே-வின் கணக்கு தவறாகப் போக வாய்ப்புள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏற்கெனவே பதிரானாவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது.
ஆண்ட்ரே ரஸல் மற்றும் வெங்கடேஷ் ஐயர் போன்ற பெரிய வீரர்களை விடுவித்ததன் மூலம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த ஏலத்தில் அதிகபட்சமாக ரூ. 64.30 கோடியுடன் களமிறங்குகிறது. இவ்வளவு பெரிய தொகையுடன், அவர்கள் பதிரானாவை ஏலத்தில் எடுக்கத் தீவிரமாக முயற்சிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கொல்கத்தா மட்டுமல்லாமல், டெல்லி கேபிடல்ஸ் அணியும் பதிரானாவை வாங்க ஆர்வமாக உள்ளது.
ஜடேஜா மற்றும் சாம் கரணை இழந்ததால், ஆல்-ரவுண்டர்களை வாங்குவதே சிஎஸ்கே-வின் முக்கிய நோக்கமாக உள்ளது. கேகேஆர் அணியால் விடுவிக்கப்பட்ட ரஸல் மற்றும் வெங்கடேஷ் ஐயரை வாங்க சிஎஸ்கே திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
பதிரானா போன்ற ஒரு திறமையான வேகப்பந்து வீச்சாளரை விடுவித்துவிட்டு, அதே பணத்தில் சிறந்த ஆல்-ரவுண்டர்களை வாங்க சிஎஸ்கே திட்டமிடுகிறது. ஆனால், தங்களின் நம்பிக்கைக்குரிய பதிரானாவை மீண்டும் ஏலத்தில் குறைந்த விலைக்கு வாங்க முடியுமா, அல்லது கொல்கத்தா போன்ற அணிகள் தட்டிச் செல்லுமா என்பது 2026 ஐபிஎல் ஏலத்தில் தெரியவரும். சிஎஸ்கே-வின் இந்த வியூகம் வெற்றி பெறுமா அல்லது பெரும் பின்னடைவாக அமையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கலாம்.