மும்பை: வங்கதேச பிரிமியர் லீக் (BPL) தொடரிலிருந்து தான் நீக்கப்பட்டதாக வெளியான செய்திகளை இந்தியத் தொகுப்பாளினி ரித்திமா பதக் திட்டவட்டமாக மறுத்துள்ளார். "என்னை யாரும் நீக்கவில்லை; எனக்கு என் தேசமே முக்கியம் என்பதால், நானே விலகும் முடிவை எடுத்தேன்" என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியா - வங்கதேசம் இடையிலான கிரிக்கெட் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தில் நடைபெற்று வரும் பிபிஎல் டி20 தொடரில், பாகிஸ்தான் தொகுப்பாளினி ஜைனப் அப்பாஸ் உடன் இணைந்து ரித்திமா பதக் போட்டிகளைத் தொகுத்து வழங்கி வந்தார். திடீரென அவர் அந்தத் தொடரிலிருந்து வெளியேறியது, அவர் நீக்கப்பட்டதாகப் பேசப்பட்டது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தனது சமூக வலைதள பக்கத்தில் ரித்திமா பதக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "உண்மை முக்கியம். கடந்த சில மணி நேரங்களாக, பிபிஎல் தொடரிலிருந்து நான் 'நீக்கப்பட்டதாக' ஒரு கதை பரப்பப்பட்டு வருகிறது. அது முற்றிலும் பொய்யானது. அந்தத் தொடரிலிருந்து விலகுவது என்பது நானாக எடுத்த தனிப்பட்ட முடிவு.
எனக்கு எப்போதும் என் தேசமே முதன்மையானது. எந்த ஒரு தனிப்பட்ட பணி நியமனத்தையும் விட, கிரிக்கெட் விளையாட்டை நான் உயர்வாக மதிக்கிறேன். இத்தனை ஆண்டுகளாக நான் நேர்மையுடனும், மரியாதையுடனும், அர்ப்பணிப்புடனும் கிரிக்கெட்டிற்காகப் பணியாற்றியுள்ளேன். அது என்றும் மாறாது.
எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. கிரிக்கெட்டிற்குத் தேவை உண்மை மட்டுமே. இதற்கு மேல் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை."
இவ்வாறு அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், வங்கதேச வாரியம் தன்னை நீக்கவில்லை என்றும், தற்போதைய சூழலில் தேசத்தின் நலன் கருதித் தானே வெளியேறியதாகவும் அவர் தெளிவுபடுத்தத்துள்ளார்.
2026 ஐபிஎல் தொடருக்காகக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ரூ. 9.2 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான், பிசிசிஐ-யின் உத்தரவின் பேரில் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இது வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே, இந்தியத் தொகுப்பாளினியை வங்கதேசம் நீக்கியதாக வதந்திகள் பரவின.
ஆனால், "என் நாட்டை அவமதிக்கும் இடத்தில் நான் ஏன் இருக்க வேண்டும்?" என்ற ரீதியில் ரித்திமா பதக் தாமாகவே வெளியேறியிருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே, பாதுகாப்பு காரணங்களைக் காட்டி டி20 உலகக் கோப்பைக்காக இந்தியா வர வங்கதேசம் மறுத்து வருகிறது.
"இந்தியா வராவிட்டால் புள்ளிகளை இழக்க நேரிடும்" என ஐசிசி எச்சரித்துள்ள நிலையிலும், இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையிலான பனிப்போர் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இந்தச் சூழலில் இந்தியத் தொகுப்பாளினியின் இந்தத் துணிச்சலான முடிவு இந்திய ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.