ஐபிஎல்-இல் தடை செய்யப்பட்ட லிஸ்ட்டில் ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங்.. ஹாரி புரூக் உட்பட 4 வீரர்கள்
மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் இருந்து இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் தடை செய்யப்பட்டு இருக்கிறார். அவர் 2027 ஐபிஎல் தொடர் வரை ஏலத்தில் பங்கேற்கவும், ஐபிஎல் தொடரில் விளையாடவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அவருக்கு முன்பே மூன்று வீரர்களுக்கு இதுவரை ஐபிஎல் தொடரில் ஆடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அந்த மூன்று வீரர்களும் இந்திய வீரர்கள் தான். அதில் இருவர் ஹர்பஜன் சிங் மற்றும் ரவீந்திர ஜடேஜா என்பதுதான் வியப்புக்குரிய உண்மை. அது பற்றி விரிவாக பார்க்கலாம். அத்துடன் ஹாரி புரூக் ஏன் தடை செய்யப்பட்டார்? என்பது பற்றியும் பார்க்கலாம்.

ஹாரி புரூக் தடை:
இதுவரை ஐபிஎல் தொடரில் ஹாரி புரூக்கையும் சேர்த்து நான்கு வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக பிசிசிஐ ஒரு விதியை உருவாக்கியது. அதன்படி ஒரு வீரர் ஏலத்தில் பங்கேற்று, ஒரு அணியால் வாங்கப்பட்ட பிறகு ஐபிஎல் தொடருக்கு முன் நியாயமற்ற காரணங்களுக்காக விலகினால், அந்த வீரருக்கு நடப்பு ஐபிஎல் தொடரிலும், அடுத்த இரண்டு ஐபிஎல் தொடரிலும் விளையாடவும், ஏலத்தில் பங்கேற்கவும் தடை விதிக்கப்படும்.
ஹாரி புரூக் டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் 2025 ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்டார். ஆனால், தற்போது அவர் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாது என விலகி இருக்கிறார். அதன்படி ஹாரி புரூக் தற்போது மூன்று ஆண்டு தடையில் சிக்கியிருக்கிறார்.
பிரவீன் தாம்பே தடை:
அவருக்கு முன் 2020 ஆம் ஆண்டு பிரவீன் தாம்பே தடையை சந்தித்தார். 41 வயதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐபிஎல்-இல் அறிமுகமானவர் தான் பிரவீன் தாம்பே. அதனால், ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் அவர் கவனம் பெற்று இருந்தார். 2014 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்து இருந்தார்.
அடுத்து அவர் 2020 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்று இருந்தார். அந்தத் தொடருக்கு முன்னதாக அவர் கரீபியன் பிரிமியர் லீக் மற்றும் அபுதாபி டி10 லீக் ஆகிய போட்டிகளில் பிசிசிஐ அனுமதி இன்றி பங்கேற்றார். பிசிசிஐ விதிப்படி இந்திய வீரர்கள் யாரும் ஐபிஎல் தவிர வேறு நாட்டின் டி20 தொடர்களில் விளையாடக் கூடாது.
பிரவீன் தாம்பே அந்த விதியை மீறியதால் அவருக்கு அந்த ஐபிஎல் தொடரில் விளையாட தடை விதிக்கப்பட்டது. 2010ஆம் ஆண்டு ரவீந்திர ஜடேஜாவுக்கு ஓராண்டு ஐபிஎல் தொடரில் விளையாட தடை விதிக்கப்பட்டது.
ரவீந்திர ஜடேஜா தடை:
2008 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ரவீந்திர ஜடேஜா இடம் பெற்று இருந்தார். அப்போது அண்டர் 19 உலக கோப்பை வென்ற அணியில் இடம் பெற்றவர் என்ற பெயருடன் அவர் அந்த அணியில் இடம் பெற்றார்.
2010 ஐபிஎல் தொடருக்கு முன் ரவீந்திர ஜடேஜா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இடம் மாற திட்டமிட்டு இருந்ததாகவும், அந்த அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் சர்ச்சை எழுந்தது. ஐபிஎல் விதிப்படி ஒரு வீரரை இடம் மாற்றுவது குறித்து சம்பந்தப்பட்ட இரண்டு அணிகளும் தான் பேச வேண்டும். அதுவும் பிசிசிஐ இடம் இது குறித்து வெளிப்படையாக தெரிவித்த பின்னரே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
மேலும், அவர்களின் ஒப்பந்தமும் பிசிசிஐ முன்னிலையில் பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால், ரவீந்திர ஜடேஜா தனிப்பட்ட முறையில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், யாருக்கும் தெரியாமல் ஒப்பந்தம் உருவாக்கிக் கொண்டதாகவும் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 2010 ஐபிஎல் தொடரில் விளையாட தடை விதிக்கப்பட்டது.
அதன் பின்னர் ரவீந்திர ஜடேஜா 2011 ஆம் ஆண்டு கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணியில் இடம் பெற்றார். அதன் பின் 2012 ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று ஆடி வருகிறார்.
ஹர்பஜன் சிங் தடை:
முதன் முதலில் ஐபிஎல் தொடரில் தடையை சந்தித்தவர் ஹர்பஜன் சிங். 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் உருவாகி இருந்தது. அப்போதே ஹர்பஜன் சிங் மற்றும் ஸ்ரீசாந்த் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கினர். மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடிய போட்டியின் முடிவில் இரு அணி வீரர்களும் கை குலுக்க வந்தபோது ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த் கன்னத்தில் அறைந்தார்.
ஸ்ரீசாந்த் கண்ணீர் விட்டு அழுதார். இந்த விவகாரம் தேசிய அளவில் சர்ச்சையானது. இதை அடுத்து ஹர்பஜன் சிங்குக்கு அந்த தொடரின் மீதமிருந்த போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் அடுத்தாண்டில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றார். அந்த அணியில் மூன்று ஐபிஎல் கோப்பைகளை வென்றார் ஹர்பஜன் சிங்.
அதன்பின் 2018 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்ற ஹர்பஜன் சிங் அப்போது தனது நான்காவது ஐபிஎல் கோப்பையை வென்றார். அதன் பின் இதே ஸ்ரீசாந்த் மற்றும் ஹர்பஜன் சிங் 2011 உலகக்கோப்பையில் ஒன்றாக இணைந்து விளையாடி உலக கோப்பையும் வென்றது தனி வரலாறு.


Click it and Unblock the Notifications