சிட்னி: ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற உள்ளூர் டி20 தொடரான பிக் பாஷ் லீக் (பிபிஎல்) தொடரில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை அனுமதிப்பது குறித்து அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். வெளிநாட்டுப் பணத்தை உள்ளே கொண்டு வருவதால் மட்டும் இத்தொடரின் தரத்தை உயர்த்திவிட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
உலகின் பழமையான மற்றும் பிரபலமான டி20 லீக்களில் ஒன்றான பிபிஎல் தொடரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல கிரிக்கெட் ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவின் எஸ்ஏ20 மற்றும் துபாயின் ஐஎல்டி20 போன்ற தொடர்கள் ஐபிஎல் உரிமையாளர்களின் முதலீட்டால் பெரிய அளவில் வளர்ந்துள்ளன. அதேபோல பிபிஎல் அணிகளையும் தனியார் மயமாக்கி, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க ஆஸ்திரேலிய வாரியம் முடிவு செய்துள்ளது.

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் இந்த முடிவை ஆடம் கில்கிறிஸ்ட் விமர்சித்துள்ளார். ஷேன் வாட்சன், உஸ்மான் கவாஜா போன்ற வீரர்கள் தனியார் மயமாக்கலை ஆதரித்தாலும், கில்கிறிஸ்ட் இதற்கு உடன்படவில்லை.
இது குறித்துப் பேசிய அவர், "இந்தியாவிலிருந்தோ அல்லது துபாயிலிருந்தோ பணத்தை உள்ளே கொண்டு வருவதால் மட்டும் போட்டியின் தரம் உயர்ந்துவிடாது. பணத்தை கொட்டுவதால் மட்டும் ரசிகர்களிடம் அந்தத் தொடருக்கான ஆர்வம் மற்றும் பற்று வந்துவிடுமா என்று எனக்குத் தெரியவில்லை. வெளிநாட்டு முதலீட்டால் பிபிஎல் தொடரின் தனித்துவம் கெட்டுவிடக்கூடாது" என்று தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதற்கிடையில், பிபிஎல் தொடரில் அணிகளை விற்பனை செய்யும்போது, அதிகபட்சமாக 3 அணிகளை மட்டுமே இந்திய உரிமையாளர்களுக்கு விற்க கிரிக்கெட் ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அனைத்து அணிகளையும் இந்தியர்களே வாங்கினால் ஆதிக்கம் ஒரே இடத்தில் இருக்கும் என்பதால், அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரக முதலீட்டாளர்களுக்கும் வாய்ப்பு வழங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்திய உரிமையாளர்கள் பிபிஎல் அணிகளை வாங்கினால் ஏற்படும் மற்றொரு நடைமுறைச் சிக்கலையும் கிரிக்கெட் உலகம் உற்று நோக்குகிறது. பொதுவாக ஐபிஎல் உரிமையாளர்கள் பாகிஸ்தான் வீரர்களைத் தங்கள் அணிகளில் சேர்ப்பதில்லை. இதே நிலை பிபிஎல் தொடரிலும் தொடர்ந்தால், அது தொடரின் சுவாரஸ்யத்தைக் குறைக்கும் என்ற விவாதம் எழுந்துள்ளது. ஏற்கனவே இங்கிலாந்தின் தி ஹண்ட்ரட் தொடரில் இதுபோன்ற சிக்கல்கள் பேசப்பட்டு வருகின்றன.

இந்திய நிறுவனங்கள் ஆஸ்திரேலிய லீக்கில் முதலீடு செய்வதால், இந்திய வீரர்களை பிபிஎல் தொடரில் விளையாட பிசிசிஐ அனுமதிக்கும் என ஆஸ்திரேலிய வாரியம் கணக்கு போடுகிறது. ஆனால், பிசிசிஐ தனது வீரர்களை வெளிநாட்டு லீக்களில் விளையாட அனுமதிப்பதில்லை என்ற கொள்கையில் பிடிவாதமாக இருப்பதால், அது நடப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்றே தெரிகிறது.
ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக் டி20 தொடரைத் தனியார் மயமாக்கும் முயற்சிக்குக் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், ஆடம் கில்கிறிஸ்ட் போன்ற ஜாம்பவான்களின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இதற்கிடையே 2026 ஆண்டு பிக் பாஷ் லீக் தொடரின் முதல் போட்டியை சென்னை சேப்பாக்கத்தில் நடத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முயற்சி எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.