நாக்பூர்: டெக்கான் சார்ஜர்ஸ் ஹைதராபாத்துடன் நடந்த மோதலில் படு தோல்வியைச் சந்தித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். இதனால் அடுத்து வரும் 3 போட்டிகளிலும் வென்றால் மட்டுமே அரை இறுதி குறித்து சென்னையால் நினைத்துப் பார்க்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று நடந்த முக்கியமான போட்டியில், ஹைதராபாத்திடம் பரிதாபத் தோல்வியைச் சந்தித்துள்ளனர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர்.
கடந்த 3 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று வ்நத சென்னை அணி நேற்றைய போட்டியிலும் வெல்லும் என்று ரசிகர்கள் ஆவலோடு இருந்தனர். ஆனால் சென்னை அணியின் பேட்டிங் பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோணி, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். முரளி விஜய்யும், மாத்யூ ஹெய்னும் அதிரடியான ஒரு ஆட்டத்தைக் காட்டப் போவதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தினர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஹெய்டன் 19 ரன்களில் ஆட்டமிழந்து விட்டார்.
அதன் பின்னர் முரளியும், சுரேஷ் ரெய்னாவும் இணைந்தனர். முரளி விஜய் வழக்கம் போல சிறப்பாக ஆடினார். ஆனால் பெரிய ஸ்கோரை எட்ட முயலும்போது அவர் ரன் அவுட் ஆகி விட்டார். 13 பந்துகளைச் சந்தித்த முரளி, ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 23 ரன்களைக் குவித்திருந்தார்.
அதன் பின்னர் சுரேஷ் ரெய்னா கைகளுக்கு ரன் குவிக்கும் பொறுப்பு மாறியது. ஆனால் அதற்குத் துணை நிற்கும் பொறுப்பை யாரும் உணர்ந்த்ததாகத் தெரியவில்லை. அந்த அளவுக்கு பின்னால் வந்தவர்களின் பேட்டிங் மோசமாக அமைந்தது.
கேப்டன் டோணி 7, ஹஸ்ஸி 8, பத்ரிநாத் 6 என அடுத்தடுத்து வெளியேறினர். இப்படி எதிர்முனையில் வந்த வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறிய நிலையில் கடுமையாக போராடி 52 ரன்களைக் குவித்தார் ரெய்னா.
அவர் மட்டும் நேற்று சரியாக ஆடாமல் இருந்திருந்தால் சென்னை அணி ரொம்பக் கேவலமான ஸ்கோரை எட்டியிருக்கும்.
20 ஓவர் வரை தாக்குப்பிடித்த சென்னை அணி 8 விக்கெட் இழப்புக்கு 138 ரன்களை எடுத்தது.
ஹைதராபாத் அணியின் ஹாரிஸ், சென்னையின் முதுகெலும்பை முறித்துப் போட்டு விட்டார். 3 விக்கெட்களை இவர் வீழ்த்தினார்.
பின்னர் ஆட வந்த ஹைதராபாத் அணிக்கு ஆரம்பத்தில் தடுமாற்றம் ஏற்பட்டது. இருப்பினும் வழக்கம் போல திருமலாசெட்டி சுமன் இந்த முறையும் அணிக்கு கை கொடுத்துத் தூக்கி விட்டார். அபாரமாக ஆடிய அவர் 44 பந்துகளில் 55 ரன்களைக் குவித்தார்.
அதேபோல சைமண்ட்ஸும் பொறுப்புடன் ஆடி 22 பந்துகளில் 23 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோல ஸ்மித்தும் 8 பந்துகளில் 13 ரன்களை விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.
19.1 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 139 ரன்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஹைதராபாத்.
நெருக்கடியில் சென்னை
சென்னை அணி இதுவரை 11 போட்டிகளில் ஆடி 5 போட்டிகளில் வென்று 6 போட்டிகளில் தோல்வியுற்றுள்ளது. 10 புள்ளிகளுடன் உள்ள சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் 5வது இடத்தல் இருக்கிறது.
சென்னையைப் போல கொல்கத்தா, ஹைதராபாத் அணிகளும் பத்து புள்ளிகளுடன் உள்ளன. ரன் ரேட் அடிப்படையில் இவர்களை விட சற்று மேலான நிலையில் இருக்கிறது சென்னை.
இன்னும் 3 போட்டிகளில் சென்னை ஆட வேண்டியுள்ளது. அந்த மூன்றிலும் சென்னை வென்றாக வேண்டும்.
அடுத்து கொல்கத்தா அணியை சேப்பாக்கத்தில் சந்திக்கிறது சென்னை.
--