“பீர் குடிக்க வரும் நண்பர்களை எல்லாம்..".. ஐபிஎல் பயிற்சியாளர்களை வறுத்தெடுத்த சுனில் கவாஸ்கர்
மும்பை: ஐபிஎல் தொடரில் உள்ள சில பயிற்சியாளர்கள் தங்களது நண்பர்களை உதவிப் பயிற்சியாளர்களாகவும், ஊழியர்களாகவும் நியமிப்பதை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். "தங்களுடன் கோல்ஃப் விளையாடும் மற்றும் பீர் குடிக்கும் நண்பர்களை" உதவி ஊழியர்களாக வைத்துக் கொள்ளும் பயிற்சியாளர்கள் குறித்து அவர் பரபரப்பான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
நடப்பு 2026 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடிய 14 போட்டிகளில் வெறும் 4 வெற்றிகளை மட்டுமே பெற்று, புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது. இதனால் ஏற்பட்ட ஏமாற்றத்தால் ரிஷப் பண்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகினார். அப்போது, "எனது காதுகளில் பல குரல்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன" என்று அவர் மறைமுகமாக லக்னோ அணியின் அதிகப்படியான பந்துவீச்சு, பேட்டிங் பயிற்சியாளர்கள் மற்றும் உதவி ஊழியர்களைக் குற்றம் சாட்டினார்.

கவாஸ்கர் அதிருப்தி
இது குறித்துத் தனது கட்டுரை ஒன்றில் எழுதியுள்ள சுனில் கவாஸ்கர், "ரிஷப் பண்ட் தனது காதுகளில் பல குரல்கள் கேட்டுக்கொண்டே இருந்ததாகக் கூறியது, அந்த அணியின் உதவி ஊழியர்களுக்குக் கிடைத்த பாராட்டு அல்ல. பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் வாய்ச் சவடால் விடுவது எளிது. ஆனால், கிரிக்கெட் என்பது அவர்கள் நினைப்பதை விட முற்றிலும் மாறுபட்டது. சில பயிற்சியாளர்கள் தங்களது கோல்ஃப் விளையாடும் மற்றும் பீர் குடிக்கும் நண்பர்களையே உதவி ஊழியர்களாகத் தேர்வு செய்கின்றனர். இதனால் தான் அந்த அணிகள் தொடர் தொடங்கி ஒரு மாதத்திற்குள்ளேயே பிளே-ஆப் வாய்ப்பை இழந்து வெளியேறுகின்றன" என்று சாடியுள்ளார்.
ஆண்டி பிளவரைப் பாராட்டிய கவாஸ்கர்
அதே சமயம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்டி பிளவரை கவாஸ்கர் பாராட்டினார். "ஆர்சிபி அணிக்குத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் (2025 மற்றும் 2026) கோப்பையை வென்று கொடுத்துள்ளார் ஆண்டி பிளவர். அவர் எவ்வித ஆரவாரமும் இன்றி, பெரிய அறிக்கைகளை வெளியிடாமல் அமைதியாகத் தனது வேலையைச் செய்கிறார். அவரிடம் இது போன்ற 'பீர் குடிக்கும்' நண்பர்கள் யாரும் உதவி ஊழியர்களாக இல்லை. இதிலிருந்து மற்ற அணிகள் பாடம் கற்க வேண்டும்" என்று கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.
27 கோடி அழுத்தம்
கடந்த 2025-ம் ஆண்டு நடந்த ஏலத்தில் லக்னோ அணி ரிஷப் பண்ட்டை 27 கோடி ரூபாய் என்ற சாதனை விலைக்கு வாங்கியது. ஆனால், கேப்டனாகவும் பேட்டராகவும் அவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. லக்னோ அணி தொடர்ந்து சொதப்பியதால் இந்த முறை தலைமை மற்றும் பயிற்சியாளர் குழுவில் பெரிய மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. கவாஸ்கரின் இந்த அதிரடி விமர்சனம் ஐபிஎல் வட்டாரத்தில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications

