பெங்களூர்: ராபின் உத்தப்பா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரின் அட்டகாசமான ஆட்டத்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்.
பெங்களூரில் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட் செய்தது கொல்கத்தா. கங்குலியும், கெய்லும் இணைந்து சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர்.
கங்குலி 33 ரன்களையும், கெய்ல் 15 பந்துகளில் 34 ரன்களையும் விளாசினர். இவர் பிரிந்தபோது வந்து சேர்ந்த மெக்கல்லம் தன் பங்குக்க அதிரடியாக ஆடி 45 ரன்களைக் கவித்தார்.
ஆனால் அதன் பின்னர் வந்தவர்கள் சொதப்பி விட்டனர். செளரப் திவாரி முட்டை வாங்கினார். மாத்யூஸ் 1 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
சாஹா முயன்று பார்த்து 13 ரன்களில் திரும்பினார். பூஜாரா அதிரடியாக ஆடி 8 பந்துகளில் 16 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். அத்துடன் முடிந்தது கொல்கத்தாவின் ரன் குவிப்பு.
20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்த கொல்கத்தா 160 ரன்களை எடுத்தது.
கொல்கத்தாவின் பேட்டிங் வரிசை சீர்குலைய முக்கியக் காரணம் வினய் குமாரின் பந்து வீச்சுதான். அபாரமாக பந்து வீசிய வினய், 3 விக்கெட்களைச் சாய்த்தார். அதேபோல கல்லிஸும் 2 விக்கெட்களை சாய்க்க, கும்ப்ளே, ஸ்டெயினுக்கு தலா ஒரு விக்கெட் கிடைத்தது.
பின்னர் ஆட வந்த பெங்களூர் அணிக்கு ஸ்ரீராமும், கல்லிஸும் சுமாரான தொடக்கத்தையே கொடுத்தனர். கல்லிஸ் 8 ரன்களில் வீழ, ஸ்ரீராம் 27 ரன்களை எடுத்து வெளியேறினார்.
இருப்பினும் பின்னர் சேர்ந்த டிராவிடும், உத்தப்பாவும் பிரமாதமாக ஆடி ரன்களைக் குவித்து ரசிகர்களை குஷியாக்கி விட்டனர்.
டிராவிட் பொறிந்து தள்ளி 35 பந்துகளில் 52 ரன்களைக் குவிக்க, அதை விட அதிரடியாக ஆடிய உத்தப்பா, 22 பந்துகளில் 52 ரன்களைக் குவித்து கொல்கத்தாவின் வெற்றிக் கனவை தவிடுபொடியாக்கி விட்டார்.
கடைசி நேரத்தில் வந்த டெய்லரும் 6 பந்துகளில் 14 ரன்களைக் குவித்தார். இறுதியில், 17.1 ஓவர்களிலேயே 3 விக்கெட்களை மட்டும் இழந்த பெங்களூர் 164 ரன்களைக் குவித்து வெற்றிக் கோட்டை தாண்டியது.
12 புள்ளிகளுடன் தற்போது புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது பெங்களூர். நேற்றைய வெற்றி அந்த அணிக்கு 6வது வெற்றியாகும்.