சென்னை : டெல்லி டேர்டெவில்ஸ் அணி பந்து வீச்சில் அபார வேகத்தைக் காட்டியதால் மிகவும் குறைந்த ஸ்கோரை எடுத்துச் சுருண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பின்னர் தனது பந்து வீச்சில் மிரட்டிய போதிலும், கம்பீரின் பொறுப்பான ஆட்டத்தால் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று விட்டது.
சென்னையில் நேற்று நடந்த மிக முக்கியமான போட்டியில் டெல்லியும், சென்னையும் சந்தித்தன. இந்தப் போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமானது. இதில் வெல்லும் அணிக்கே அரை இறுதி வாய்ப்புகள் பிரகாசம் என்பதால் இரு அணிகளும் மிகவும் கவனமுடன் போட்டியை சந்தித்தன.
டாஸ் வென்ற கேப்டன் டோண் சென்னை அணி பேட்டிங்கை எடுக்கும் என அறிவித்தார். அதன்படி பேட்டிங்கைத் தொடங்கிய சென்னைக்கு டெல்லி அணியின் பந்து வீச்சு பெரும் எமனாக வந்து சேர்ந்தது.
டெல்லி பவுலர்களின் அபாரமான பந்து வீச்சால் ரன் எடுக்க முடியாமல் தவித்தனர் சென்னை அணியினர். முதலில் ஹெய்டன் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் முரளி விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார் கேப்டன் டோணி.
ஆனால் வந்த வேகத்தில் டக் அவுட் ஆகி வெளியேறி ரசிகர்களை வெறுப்படித்தார். பின்னர் விஜய்யும், சுரேஷ் ரெய்னாவும் இணைந்து அடித்து ஆட முயன்றனர்.
ஒரு மாதிரியாக இருவரும் செட் ஆகி வந்த நிலையில் விஜய் அவுட் ஆகி விட்டார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் ரெய்னா சற்றுப் போராடிப் போர்த்தார். ஆனால் அவரும் ஆட்டமிழக்கவே அணி தொங்கிப் போனது.
பிறகு வந்தவர்களில் பத்ரிநாத் தான் சற்று பொறுப்பாகவும், போராட்ட உணர்வுடனும் ஆடி நிதானமாக ரன்களைக் குவிக்க ஆரம்பித்தார். அவரது ஆட்டத்தால்தான் சென்னை அணியால் 100 ரன்களையே தாண் முடிந்தது.
இறுதியில் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்த சென்னை 112 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
பின்னர் ஆட வந்த டெல்லி அணிக்கு அஷ்வின் தொடக்கத்திலேயே அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். அதிரடி வீரர் வார்னரை அவுட் செய்து வெளியேற்றினார் அஷ்வின்.
அடுத்த ஓவரில், போலிங்கர் தனது பங்குக்கு 2 விக்கெட்களை அடுத்தடுத்து சாய்த்து டெல்லியை பீதியடைய வைத்தார். 6 ரன்கள் எடுத்து 3 விக்கெட்களை இழந்து டெல்லி தடுமாற ஆரம்பித்தது.
இதனால் சென்னை அணியினருக்கு நம்பிக்கை பிறந்தது. ஆனால் கம்பீர் வந்து அதைத் தகர்த்து விட்டார். கடுமையாகப் போராடிய அவர் நிதானமா ரன்களைக் குவிக்க ஆரம்பித்தார். மறு முனையில் அவருக்குத் துணையாக போராடி வந்த திணேஷ் கார்த்திக் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஆனாலும் கம்பீரின் நிதானமும், பொறுப்பும் குறையவில்லை. அவருக்குத் துணையாக மிதுன் மன்ஹாஸ் வந்து சேர்ந்தார். இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் சிறப்பாக ஆடி அணியை வெற்றிப் படிக்கட்டில் ஏற்றி வைத்தனர்.
கம்பீர் 57 ரன்களைக் குவித்தார். மன்ஹாஸ் 25 ரன்கள் சேர்த்துக் கொடுத்தார்.
கடுமையாக சோர்வடைந்த நிலையில் காணப்பட்ட கம்பீர், அதைப் பொருட்படுத்தாமல் உறுதியுடனும், திடமுனும் ஆடிய விதம் டெல்லி ரசிகர்களை வியக்க வைத்தது.
சிறிய ஸ்கோர் என்றாலும் கூட தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்பியதால் 19வது ஓவரில்தான் வெற்றைய எட்ட முடிந்தது டெல்லியால்.
இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி 3வது இடத்தற்கு முன்னேறியுள்ளது. நான்காவது இடத்திற்கு வந்து விட்டது சென்னை.
இருப்பினும் கூட இப்போதும் சென்னை அணியின் அரை இறுதி வாய்ப்பு முழுமையாக மங்கிப் போய் விடவில்லை. அடுத்து மீதமுள்ள போட்டியில் பஞ்சாப் அணியை அது வென்றால் அரை இறுதிக்கான வாய்ப்புகள் மீண்டும் பிரகாசமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சென்னை அணியிடம் நல்ல ரன் ரேட் இருப்பதால் அடுத்த போட்டியில் வென்றால் அரை இறுதிக்குள் நுழைவதற்கு அதிக அளவில் வாய்ப்புகள் உள்ளன.
அடுத்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை தர்மசாலாவில் சந்திக்கிறது சென்னை.