சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினின் தனிப்பட்ட யூடியூப் சேனலில் அந்த அணிக்கு எதிராகவே சில வீடியோக்கள் வெளியானதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்கிடம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதனால் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதைத் தொடர்ந்து அஸ்வின் இனி தனது யூடியூப் சேனலில் சிஎஸ்கே போட்டிகள் தொடர்பான நிகழ்ச்சிகள் மற்றும் விவாதங்கள் எதையும் நடத்தப் போவதில்லை என அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அஸ்வினின் யூடியூப் பக்கத்தில் ஒரு அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது.

முன்னதாக அஸ்வின் தனது யூடியூப் சேனலில் "தி ஸ்மால் கவுன்சில்" என்ற ஐபிஎல் விவாத நிகழ்ச்சி ஒன்றை தொடங்கி வைத்தார். அவர் சிஎஸ்கே அணியில் இடம் பெற்று விளையாடி வரும் நிலையில் முதல் வீடியோவில் மட்டும் அவர் பங்கேற்றார். மற்ற வீடியோக்களில் சஷ்டிகா, பீடாக் மற்றும் வித்யுத் சிவராமகிருஷ்ணன் ஆகிய மூவரும் விவாத நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.
ஒரு கட்டத்தில் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற "பீடாக்" என்பவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சுழற்பந்துவீச்சாளர் நூர் அகமதை ஏலத்தில் வாங்கியது மிகப்பெரிய தவறு என்றும், அனுபவம் வாய்ந்த சுழற்பந்துவீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருக்கும் போது நூர் அகமது சிஎஸ்கே அணிக்கு தேவையில்லை என்று சொல்லி இருந்தார்.
ஆனால், இதுவரை சிஎஸ்கே அணியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியது நூர் அகமது தான். அஸ்வின் மிக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த சர்ச்சை ஒருபுறம் இருக்க, வித்யுத் சிவராமகிருஷ்ணன் என்பவர் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் திறமையை அடையாளம் காணும் குழுவில் இருந்ததாகவும், தான் கூறிய இளம் வீரர்களை அந்த அணி ஏலத்தில் வாங்கவில்லை என்றும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார்.
இதுபோல சிஎஸ்கே அணிக்கு எதிராகவே அஸ்வின் யூடியூப் சேனலில் கருத்துக்கள் வெளியாகி வந்தது. இது தொடர்பாக ரசிகர்கள் மத்தியிலும் சலசலப்பு எழுந்ததை அடுத்து தற்போது இனி தனது யூடியூப் சேனலில் 2025 ஐபிஎல் தொடர் முடியும் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்பான நிகழ்ச்சிகள் எதுவும் ஒளிபரப்பாகாது என அஸ்வின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு இங்கே:
"கடந்த வாரம் இந்த மன்றத்தில் (ஃபோரம்) நடந்த விவாதங்களின் தன்மையைக் கருத்தில் கொண்டு, விஷயங்கள் எவ்வாறு தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம் என்பதில் நாங்கள் கவனமாக இருக்க விரும்புகிறோம். இதன் காரணமாக, இந்தப் ஐபிஎல் தொடரின் மீதமுள்ள காலத்திற்கு சிஎஸ்கே போட்டிகள் குறித்த முன்னோட்டங்கள் மற்றும் விமர்சனங்கள் ஆகிய இரண்டையும் வழங்குவதிலிருந்து விலகிக்கொள்ள நாங்கள் முடிவு செய்துள்ளோம்."
"எங்கள் நிகழ்ச்சிகளில் வெளிப்படும் பல்வேறு கண்ணோட்டங்களை நாங்கள் மதிக்கிறோம். மேலும், உரையாடலானது நாங்கள் நிறுவிய தளத்தின் நேர்மைக்கும் நோக்கத்திற்கும் உண்மையாக இருப்பதை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்கள் விருந்தினர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள் அஸ்வினின் தனிப்பட்ட கருத்துக்களைப் பிரதிபலிக்கவில்லை. நிகழ்ச்சியின் நோக்கத்துடன் சிந்தித்து ஈடுபடும் அனைவருக்கும் எங்களது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்."
"உங்கள் கருத்துக்கள், நாங்கள் பல ஆண்டுகளாக உருவாக்கியதைச் செம்மைப்படுத்தவும் மேம்படுத்தவும் தொடர்ந்து உதவுகின்றன. 'தி ஸ்மால் கவுன்சில்' (The Small Council) சிஎஸ்கே அல்லாத மற்ற அனைத்து போட்டிகளுடனும் வழக்கம் போல் தொடரும். இந்த விறுவிறுப்பான ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளை உங்கள் அனைவருடனும் சேர்ந்து காண ஆவலுடன் காத்திருக்கிறோம்."