
5வது சதம்
ராஜஸ்தான் அணியின் முக்கிய பலமாக கருதப்படும் ஜாஸ் பட்லர், நடப்பு சீசனில் 16 போட்டியில் விளையாடி 824 ரன்களை குவித்துள்ளார். இதன் மூலம் ஒரே சீசனில் 4 சதங்கள் விளாசி, விராட் கோலியின் சாதனையை பட்லர் சமன் செய்துள்ளார். இந்த நிலையில், பட்லருக்கு இறுதிப் போட்டியில் களமிறங்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதில் பட்லர் ஒரு சதம் அடித்தால், ஒரே சீசனில் அதிக சதம் விளாசிய ஒரே வீரர் என்ற மகத்தான சாதனையை அவர் படைப்பார்.

அதிக ரன்கள் பட்டியல்
இதே போன்று இன்றைய ஆட்டத்தில் பட்லர் மேலும் 149 ரன்கள் அடித்தால், விராட் கோலியின் ஒரே சீசனில் அதிக ரன்கள் அடித்த சாதனையை உடைக்க முடியும். இல்லையென்றால் குறைந்தபட்சம் 28 ரன்கள் அடித்தால், ஒரே சீசனில் 2வது அதிகபட்ச ரன்கள் அடித்த டேவிட் வார்னர் (848 ரன்கள்) சாதனையை பட்லர் முறியடிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.

ரஷித் கானால் ஆபத்து
ஆனால் ஜாஸ் பட்லருக்கு ரஷித் கான் உருவத்தில் ஒரு ஆபத்து காத்திருக்கிறது. டி20 கிரிக்கெட்டில் பட்லர், ரஷித் கானிடம் மட்டும் தான் அதிக முறை ஆட்டமிழந்து இருக்கிறார். ஐபிஎல் தொடரில் 8 முறை விளையாடிய பட்லர் ரஷித் கானிடம் 3 முறை ஆட்டமிழந்து இருக்கிறார். இதே போன்று மொத்தமாகவே அவரது பந்துவீச்சில் 25 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். ஸ்டரைக் ரேட் 60 மட்டும் தான். இதனால் பட்லர் ரஷித் கான் என்ற கண்டத்தை தாண்ட வேண்டும்.

சாஹல் சாதனை வாய்ப்பு
இன்றைய ஆட்டத்தில் சாஹல், ஒரு விக்கெட்டை வீழ்த்தினால், நடப்பு சீசனில் அதிக விக்கெட் வீழ்த்தியதற்கான பர்பிள் தொப்பியை வெல்வார். ஆனால் சாஹல் கடைசியாக 2 போட்டியில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தவில்லை. ரன்களையும் கட்டுப்படுத்தவில்லை. இன்றைய போட்டியில் சாஹல் அபாரமாக செயல்பட்டே தீர வேண்டும். நடப்பு சீசனில் ராஜஸ்தான் சுழற்பந்துவீச்சாளர்கள் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தால், அந்தப் போட்டியில் அந்த அணி 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











