அகமதாபாத்: 2025 ஐபிஎல் தொடரில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் 200 ரன்களை எட்ட முடியாமல் திணறியது. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அகமதாபாத் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்ற நிலையில், அந்த ஆடுகளத்தில் முதல் இன்னிங்ஸில் 200 ரன்களுக்கும் அதிகமான ஸ்கோரை எடுப்பது சவாலான இலக்காக அமையும் என ஆடுகள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதல் பாதி ஆட்டத்தில் சற்று திணறியது. ஒரு பக்கம் விராட் கோலி நங்கூரமிட்டு ஆடினாலும், அதிக பந்துகளை வீணடித்தார். முதல் 10 ஓவர்களில் அவர் மட்டுமே 18 டாட் பால்களை ஆடி இருந்தார். மறுபுறம் விக்கெட்டுகள் சரியத் தொடங்கின. ஃபில் சால்ட் 9 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. ஜேமிசன் முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார்.
அடுத்து மூன்றாம் வரிசையில் இறங்கிய மயங்க் அகர்வால் நிதானமாக ஆடி, 18 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்தார். அதன் பிறகு வந்த கேப்டன் ரஜத் பட்டிதார் அதிரடியாக ஆட முயன்று, 16 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர், லியம் லிவிங்ஸ்டன் 15 பந்துகளில் 24 ரன்களும், ஜித்தேஷ் சர்மா 10 பந்துகளில் 24 ரன்களும் அடித்தனர்.
இவர்களது அதிரடி ஆட்டத்தால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கடைசி நேரத்தில் சற்று நிமிர்ந்தது. குறிப்பாக, 16வது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ஜித்தேஷ் சர்மா இரண்டு பவுண்டரிகள் அடித்தார். அந்த ஓவரில் மொத்தம் 13 ரன்கள் எடுக்கப்பட்டது. அடுத்து, 17வது ஓவரில் கைல் ஜேமிசன் பந்துவீச்சில் லியம் லிவிங்ஸ்டன் ஒரு சிக்ஸரும், ஜித்தேஷ் சர்மா இரண்டு சிக்ஸர்களும் விளாசினர். அந்த ஓவரில் மட்டும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 23 ரன்கள் குவித்தது.
இந்த இரண்டு ஓவர்களில் மட்டும் மொத்தம் 36 ரன்கள் சேர்க்கப்பட்டன. அதுவே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது. ஆனால், அதன் பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன. லியம் லிவிங்ஸ்டன் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆட்டமிழந்த பிறகு, களமிறங்கிய ரொமாரியோ ஷெப்பர்ட் அதிரடியாக ஆட முயன்றும், அவரால் பெரிய அளவில் ரன் குவிக்க முடியவில்லை. அவர் 9 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார்.
அவரும் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் களமிறங்கிய க்ருனால் பாண்டியா 5 பந்துகளில் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் புவனேஷ்வர் குமாரும் 2 பந்துகளில் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த கடைசி ஓவரில் மூன்று ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டு, மூன்று விக்கெட்டுகளும் வீழ்ந்தன.
இதனால், கடைசி ஓவரில் அதிரடியாக ஆடி 200 ரன்களை எட்டலாம் என்ற ஆர்சிபியின் எண்ணம் ஈடேறவில்லை.இறுதியாக, 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணி முதல் பத்து ஓவர்களில் ஆடிய மந்தமான ஆட்டத்தைக் கருத்தில் கொள்ளும்போது, இந்த ஸ்கோர் ஒரு சவாலான இலக்காகவே பார்க்கப்பட்டது.
அர்ஷ்தீப் சிங் கடைசி ஓவரில் மட்டும் 3 விக்கெட்கள் வீழ்த்திய நிலையில் கைல் ஜேமிசன் முக்கிய பேட்ஸ்மேன்களான ஃபில் சால்ட், ரஜத் படிதார் மற்றும் லியம் லிவிங்ஸ்டன் ஆகியோரது விக்கெட்களை வீழ்த்தினார். கட்டுக்கோப்பாக பந்து வீசிய விஜயகுமார் வைஷாக் 4 ஓவர்களில் 30 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். அஸ்மத்துல்லா ஓமர்ஜாய் 4 ஓவர்களில் 35 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டும், சாஹல் 4 ஓவர்களில் 37 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.