கெய்லின் மின்னல் வேக சதம்... மிரட்டல் பந்து வீச்சில் வென்றது பெங்களூர்!!

ஐபிஎல் - 4 போட்டியின் 29-வது நாளான நேற்று பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த 47-வது லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் ஜெயித்த பஞ்சாப் கேப்டன் கில்கிறிஸ்ட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். தனது முடிவு தவறானது என்பதை அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர் உணர்ந்திருந்தார்.
கெய்லின் அதிரடி
பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அதிரடி சூரர்கள் கிறிஸ் கெய்லும், தில்ஷனும் களம் புகுந்தனர். தில்ஷன் 9 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 16 ரன்களில் வெளியேறினார். அடுத்து கோக்லி, கெய்லுடன் ஜோடி சேர்ந்தார்.
இதன் பிறகு கிறிஸ் கெய்ல், தனது புயல்வேக தாக்குதலை தொடுத்தார். சர்வ சாதாரணமாக பந்துகளை சிக்சருக்கு விரட்டிய அவர், பஞ்சாப் பந்து வீச்சாளர்கள் அனைவரையும் ஒரு வழியாக்கினார். அவரை எப்படி சமாளிப்பதென்றே தெரியாமல் கதிகலங்கி போய் நின்றனர்.
அதே சமயம் உள்ளூர் ரசிகர்களுக்கு, கெய்ல் சரியான விருந்து படைத்தார். எந்த பவுலர்களையும் அவர் விட்டு வைக்கவில்லை. பஞ்சாப் பயன்படுத்திய 6 பந்து வீச்சாளர்களின் ஓவர்களிலும் கெய்ல் சிக்சர்களாக விளாசினார்.
வெறும் 46 பந்துகளில், ஐ.பி.எல்.-ல் தனது 2-வது சதத்தை பூர்த்தி செய்தார் கெய்ல். அவர் 107 ரன்கள் எடுத்திருந்த போது (49 பந்து, 10 பவுண்டரி, 9 சிக்சர்) அவுட்டாகி வெளியேறினார். கெய்ல், வெறும் 13 ரன்கள் மட்டுமே ஓடி எடுத்தார். மற்ற 94 ரன்கள் சிக்சர், பவுண்டரி மூலம் வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. கெய்ல் அவுட் ஆன அதே ஓவரில் விராட் கோக்லியும் (27 ரன், 31 பந்து, 4 பவுண்டரி) ஆட்டம் இழந்தார்.
205 ரன்கள் குவிப்பு
இவர்களுக்கு பிறகு ஒரு பக்கம் சவுரப் திவாரி (13 ரன்), ஆசாத் பதான் (0), முகமது கைப் (3 ரன்) ஆகியோர் வரிசையாக வெளியேறினர். ரையான் ஹாரிஸ் தனது பந்து வீச்சில், 4 பந்துகளில் 3 விக்கெட்டுகளை சரித்தார். இருப்பினும் டிவில்லியர்ஸ் அதிரடியாக ஆடி அணியை 200 ரன்களை கடக்க வைத்தார். அவர் 27 ரன்களுடன் (14 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) கடைசி வரை களத்தில் நின்றார்.
20 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவே.
முன்னதாக இதே பஞ்சாப் அணிக்கு எதிராக கடந்த ஆண்டு 2 விக்கெட்டுக்கு 204 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாக இருந்தது. பஞ்சாப் தரப்பில் ஹாரிஸ் 3 விக்கெட்டுகளும், பியுஷ் சாவ்லா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினார்கள்.
பஞ்சாப் படுதோல்வி
அடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை ஆடிய பஞ்சாப் அணியில் முதல் பந்திலேயே கேப்டன் கில்கிறிஸ்ட் (0) ரன்-அவுட் ஆனார். இந்த வீழ்ச்சியில் இருந்து பஞ்சாப் அணியால் இறுதிவரை நிமிரவே முடியவில்லை. நட்சத்திர வீரர்கள் வல்தாட்டி (21 ரன்), ஷான் மார்ஷ் (2 ரன்), தினேஷ் கார்த்திக் (20 ரன்) ஆகியோரும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 20 ஓவர்களில் பஞ்சாப் அணியால் 9 விக்கெட்டுக்கு 120 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 85 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றது.
9-வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூர் அணிக்கு இது 5-வது வெற்றியாகும். அதே சமயம் 8-வது ஆட்டத்தில் பங்கேற்ற பஞ்சாப் அணி சந்தித்த 5-வது தோல்வியாகும்.
இந்த ஆண்டு ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தலா 14 லீக் ஆட்டங்களில் (5 அணிகளுடன் தலா 2 முறை, 4 அணிகளுடன் தலா ஒரு முறை) விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முந்தைய 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும். அடுத்த சுற்றுக்கு தகுதி பெற ஒவ்வொரு அணிக்கும் 8 வெற்றிகள் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:46 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications