அக்டோபர்ல ஐபிஎல் போட்டிகள நடக்கறது சந்தேகம்தான்... சுனில் கவாஸ்கர் திட்டவட்டம்
டெல்லி : அக்டோபர் மாதத்தில் இந்த சீசனுக்கான ஐபிஎல் போட்டிகளை நடத்துவது சந்தேகமே என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
டி20 உலக கோப்பை தொடர் ஒத்தி வைக்கப்படும் என்றும் இதுகுறித்த அறிவிப்பை அடுத்த மாதத்தில் ஐசிசி வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது விளையாட்டு போட்டிகளில் 25 சதவிகித ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
இதனிடையே, டி20 உலக கோப்பை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அதற்கு முன்னதாகவே செப்டம்பர் மாதத்தில் ஐபிஎல் போட்டிகளை இலங்கை, யூஏஇ போன்ற இடங்களில் நடத்தி முடிக்கலாம் என்று சுனில் கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.

ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள்
கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டு கடந்த மார்ச் 29ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த ஐபிஎல் 2020 தொடர் காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் திட்டமிடப்பட்டுள்ள டி20 உலக கோப்பை தொடர் தள்ளி வைக்கப்பட்டால், அந்த காலகட்டத்தில் ஐபிஎல் தொடரை நடத்தி முடிக்க பிசிசிஐ திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஐபிஎல் குறித்து கவாஸ்கர்
இந்நிலையில் விளையாட்டு போட்டிகளில் 25 சதவிகித ரசிகர்களை அனுமதிக்க உள்ளதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து டி20 உலக கோப்பை போட்டி அங்கு நடைபெறும் என்று தெரியவருகிறது. இந்நிலையில், டி20 உலக கோப்பைக்கு முன்னதாக செப்டம்பர் மாத துவக்கத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடத்தலாம்
செப்டம்பர் முதல் வாரத்தில் இலங்கை, யூஏஇ போன்ற இடங்களில் ஐபிஎல் போட்டிகளை நடத்தி முடிக்கலாம் என்றும், வழக்கமாக இல்லாமல் குறுகிய தொடராக இது நடத்தப்படலாம் என்றும் கவாஸ்கர் கூறியுள்ளார். இந்தியாவில் பருவமழை காலம் செப்டம்பரில் இருக்கும் என்பதால் இங்கு ஐபிஎல் போட்டிகளை நடத்துவது சாத்தியப்படாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வித்தியாசமாக இருக்கும்
தொடர்ந்த பேசிய கவாஸ்கர், ரசிகர்கள் இல்லாத ஐபிஎல் போட்டிகள் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஐபிஎல்லுக்கு புதிதாக வரும் இளம் வீரர்கள், பயிற்சியின்மையால் மிகுந்த மனநெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதை எதிர்கொள்ள அவர்கள், தொடர்ந்து கிரிக்கெட் வீடியோக்களை பார்த்து தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications