இன்று தொடங்குகிறது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா.. 8 நகரங்களில் வண்ணமிகு தொடக்க விழா
ஹைதராபாத்: உலகின் மாபெரும் டி20 கிரிக்கெட் திருவிழாவான இந்தியன் பிரீமியர் லீக் போட்டித்தொடர் இன்று தொடங்குகிறது. ஹைதராபாத்தில் இன்று தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
வருடந்தோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 தொடரின் 10வது சீசன் நாளை தொடங்குகிறது. . இந்த கிரிக்கெட் திருவிழா மே 21ம் தேதி வரை நடைபெறுகிறது. 56 லீக் ஆட்டங்கள், பிளே ஆப் சுற்றில் 3 ஆட்டங்கள் இறுதிப் போட்டி என மொத்தம் 60 ஆட்டங்கள் நடைபெறுகிறது.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டேவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட், மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ் ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன.

முதல் போட்டி
இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இறுதிப் போட்டி ஹைதராபாத்தில் நடத்தப்படுகிறது.

8 நகரங்களில் விழா
இம்முறை தொடக்க விழாக்கள் 8 நகரங்களில் நடத்தப்படுகின்றன. இன்று ஹைதராபாத்தில் தொடக்க விழா நடைபெற உள்ள நிலையில், புனே நகரில் 6ம் தேதியும், ராஜ்கோட்டில் 7ம் தேதியும், இந்தூரிலும், பெங்களூரிலும் 8ம் தேதியிலும், மும்பையில் 9ம் தேதியும், கொல்கத்தாவில் 13ம் தேதியுமம், டெல்லியில் 15ம் தேதியும் தொடக்க விழாக்கள் நடைபெறுகின்றன.

உள்ளூர் நிகழ்ச்சிகள்
இதுபோல தொடக்க விழாக்கள் நடைபெறுவதால் உள்ளூரில் பிரபலமான சினிமா ஸ்டார்கள் அதில் பங்கேற்பர். உள் மாநில கலாசார நிகழ்ச்சிகளையும் நடத்த முடியும். எனவே முதல் முறையாக 8 மைதானங்களில் தொடக்க விழா நடைபெற உள்ளது.

டிவி ரசிகர்கள்
கடந்த வருடம் நடந்த 9வது ஐபிஎல் தொடரை 40 கோடி பேர் டிவியில் கண்டுகளித்துள்ளனர். அது, அதற்கு முந்தைய ஆண்டை ஒப்பிட்டால் இரு மடங்கு அதிகமாகும். எனவே இந்த வருடமும் டிவியில் அதிகம் பேர் கிரிக்கெட்டை கண்டுகளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications