டெல்லி: விளக்கு அணையும்போது பிரகாசமாக எரியும் என்பது போல, அரை இறுதிக்கான வாய்ப்பை சுத்தமாக இழந்து விட்ட நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வலுவான அணிகளை வீழ்த்தி ஆறுதல் வெற்றிகளைக் குவித்து வருகிறது.
அந்த வகையில், நேற்று டெல்லியில் நடந்த போட்டியில் டெல்லியைத் தோற்கடித்து அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது பஞ்சாப். முதலில் மும்பை அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது பஞ்சாப். இந்த நிலையில் நேற்று நடந்த போட்டியில் அபாரமான முறையில் ஆடி டெல்லியை சுருட்டியது.
இர்பான் பதான் அபாரமாக பந்து வீசி 3 விக்கெட்களைச் சாய்த்தார். பியூஷ் சாவ்லா 2 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் காரணமாக டெல்லி அணி 111 ரன்களில் சுருண்டு போனது.
பின்னர் ஆட வந்த பஞ்சாப் அணியின் ஜெயவர்த்தனே 38 ரன்களையும், சங்கக்காரா 33 ரன்களையும் குவித்தனர். யுவராஜ் சிங் ஆட்டமிழக்காமல் 25 பந்துகளில் 21 ரன்களை எடுத்தார்.
முன்னதாக டெல்லி அணியின் பேட்டிங் வரிசையை முற்றிலும் சீர்குலைத்து விட்டனர் பஞ்சாப் பந்து வீச்சாளர்கள். சீட்டுக் கட்டு போல சரிந்து போனது அந்த அணி. 10 ஓவர்களில் வெறும் 63 ரன்களை மட்டுமே அந்த அணி எடுத்திருந்தது.
நேற்றைய போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வென்றது. இன்னும் அந்த அணிக்கு 2 போட்டிகள் மட்டுமே உள்ளது. அதிலும் வென்றாலும் கூட அந்த அணியால் அரை இறுதிக்குப் போக முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
சுருக்கமான ஸ்கோர்
டெல்லி டேர்டெவில்ஸ்- 19.4 ஓவர்களில ஆல் அவுட் ஆகி 111 ரன்கள். கம்பீர் 26, மன்ஹாஸ் 26.
பஞ்சாப் - 18.4 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 112 ரன்கள்.
ஜெயவர்த்தனே 38, சங்கக்காரா 33, யுவராஜ் சிங் 21.